முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
ஜார்ஜ்டவுன் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத் தேர்தல்: ஜூன் 7-க்குள் நடத்த உத்தரவு
By DIN | Published On : 15th May 2019 04:09 AM | Last Updated : 15th May 2019 04:09 AM | அ+அ அ- |

ஜார்ஜ்டவுன் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தேர்தலை வரும் ஜூன் 7-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத் தேர்தல் கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்தத் தேர்தலில் செயலாளர் பதவிக்கு போட்டியிட எம்.ஆறுமுகம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் வழக்குரைஞர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால் ஆறுமுகம் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிவு மூப்பு இல்லை எனக்கூறி அவரது வேட்புமனுவைத் தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆறுமுகம் பார்கவுன்சிலில் புகார் மனு அளித்தார். அதில், தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்களை இடைநீக்கம் செய்து பார்கவுன்சில் கடந்த 2015 செப்டம்பரில் உத்தரவிட்டது. ஆனால் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த தகுதித் தேர்வில் நான் தேர்ச்சி அடைந்து விட்டேன். இந்த வெற்றியின் மூலம் எனது இடைநீக்க உத்தரவு தானாக ரத்தாவதுடன் பதிவுமூப்பும் தொடரும். எனவே என்னை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த பார்கவுன்சில் பதிவுக்குழு உறுப்பினர்களான மூத்த வழக்குரைஞர் ஆர்.சிங்காரவேலன், வழக்குரைஞர் என.சந்திரசேகர் பிறப்பித்த உத்தரவில், மனுதாரரான ஆறுமுகம் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டதால் அவரது இடைநீக்க உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எனவே அவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்.
ஜார்ஜ்டவுன் வழக்குரைஞர் சங்கத் தேர்தலை நடத்த நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அதிகாரிகள் வரும் ஜூன் 7-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இந்த தேர்தலில் 422 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.
எனவே புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கவோ, நீக்கவோ கூடாது. விதிமுறைகளை கடைப்பிடித்து தேர்தலை அமைதியான முறையில் நியாயமாக நடத்த வேண்டும். தேர்தல் தொடர்பான அறிக்கையை பார்கவுன்சிலுக்கு வரும் ஜூன் 8-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.