முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
பயணி தவறவிட்ட பையை மீட்ட காவலர்களுக்கு பாராட்டு
By DIN | Published On : 15th May 2019 04:09 AM | Last Updated : 15th May 2019 04:09 AM | அ+அ அ- |

எழும்பூர் ரயில் நிலையத்தில் பெண் பயணி தவறவிட்ட பையை மீட்டு ஒப்படைத்த இரண்டு காவலர்களை உயரதிகாரிகள் பாராட்டினர்.
சென்னை, தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ஜான்சன் அமல்ராஜ். இவரது மனைவி ரெஜினாமேரி. இவர் தனது மகன் அகஸ்டின் சகாயபிரவீன் திருமணத்துக்குச் செல்ல சென்னை எழும்பூர் ரயில்நிலையத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் வந்தார்.
தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக 4-ஆவது நடைமேடைக்கு வந்தபோது, அவர் தனது பையை மறந்து அங்கேயே விட்டுச் சென்றார். அப்போது, அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே காவலர்கள் ரவிநேசன், செல்வி ரூபிகா ஆகியோர் அங்கு கிடந்த அந்த பையை காவல்நிலையத்துக்கு எடுத்துச் சென்று சோதித்தனர். அதில் 4 பட்டுப்புடவை, 8 சவரன் மதிப்புள்ள இரண்டு தங்க சங்கிலி, ரூ.85,000 பணம் ஆகியவை இருந்தது தெரியவந்தது.
இது குறித்து, ரயில்வே காவல் நிலையத்தில் ரெஜினாமேரி தகவல் தெரிவித்தார். இதையடுத்து, நடைமேடையில் போலீஸார் கண்டெடுத்த பையை அவரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். தங்க சங்கிலி, பணம், பட்டுப்புடவை அடங்கிய பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த 2 காவலர்களை ரயில்வே காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டினர்.