முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
ரூ.4,500 கோடி செலவில் 270 புதிய சரக்கு பெட்டக ரயில்களை வாங்க கான்கார் திட்டம்
By DIN | Published On : 15th May 2019 04:14 AM | Last Updated : 15th May 2019 04:14 AM | அ+அ அ- |

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான கான்கார் சார்பில், ரூ.4,500 கோடி செலவில் சுமார் 270 சரக்குப் பெட்டக ரயில்களை அடுத்த நான்கு ஆண்டுகளில் வாங்க திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் வி. கல்யாண ராமா தெரிவித்தார்.
இது குறித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான கான்கார், உள்நாட்டு சரக்குப் பெட்டகப் போக்குவரத்துப் பணிகளைச் செய்து வருகிறது. கடந்த நிதியாண்டில் சுமார் 12 சதவீதம் வர்த்தக வளர்ச்சியை இந்நிறுவனம் பெற்றுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் குஜராத் மாநிலத்தின் காண்ட்லா துறைமுகத்திலிருந்து கொச்சி துறைமுகத்துக்கு உள்நாட்டு சரக்குப் பெட்டக போக்குவரத்து தொடங்கப்பட்டு வாரம்தோறும் கப்பல்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிழக்குக் கடற்கரை மற்றும் வங்க தேசத்துக்கு கடலோரக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரூ.4,500 கோடி செலவில் சரக்கு ரயில்கள்: நடப்பு நிதியாண்டில் ஆயிரம் கோடி ரூபாய் புதிய திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 24 ஆயிரம் உள்நாட்டுச் சரக்குப் பெட்டகங்கள் கான்கார் வசம் உள்ளன. 343 சரக்குப் பெட்டக ரயில்கள் உள்ளன.
இந்நிலையில் அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.4,500 கோடி மதிப்பீட்டில் மேலும் 270 சரக்குப் பெட்டக ரயில்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. சரக்கு ரயில்கள் சுமார் 35 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். உலகளாவிய ஒப்பந்தம் மூலம் சரக்குப் பெட்டக ரயில்கள் வாங்கப்பட உள்ளது. நாட்டின் 20 இடங்களில் சரக்குப் பெட்டக முனையங்கள் அமைக்கப்பட உள்ளன. இங்கு கொண்டு வரப்படும் சரக்குகளை இங்கிருந்து அருகில் உள்ள பகுதிகளுக்கு கொண்டு சேர்க்கத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னைக்கு அருகில் எண்ணூரில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து புதிய முனையம் அமைக்கப்பட்டு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது உற்பத்தியாளரிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு பொருள்களை எளிதாகக் கொண்டு சேர்க்க முடியும்.
ஐஸ் பேட்டரி தொழில்நுட்பம்: மேலும் குளிரூட்டப்பட்ட சரக்குப் பெட்டகங்களுக்குப் பதிலாக ஜப்பான் நாட்டின் ஐஸ் பேட்டரி என்ற புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. சரக்குப் பெட்டகத்தின் கூரையில் எளிதில் கரையாத ஐஸ் கட்டிகளை அடுக்கி வைப்பதன் மூலம் சுமார் 76 மணி நேரம் வரை 4 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சரக்குகளை கொண்டு செல்ல இயலும். இத்தொழில் நுட்பம் ஏற்கெனவே ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது விவசாய விளை பொருள்களை நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு எளிதாகவும், சேதமின்றியும் குறைந்த செலவில் எடுத்துச் செல்ல முடியும் என்றார் கல்யாண ராமா.