பம்மல், அனகாபுத்தூர் கல்குவாரி நீரை உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவு

சென்னையை அடுத்த பம்மல், அனகாபுத்தூர் கல்குவாரி நீரை மக்கள் பயன்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்புப் பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி
தண்ணீர் தேங்கி உள்ள பம்மல் செங்கழுநீர் கல் குவாரி
தண்ணீர் தேங்கி உள்ள பம்மல் செங்கழுநீர் கல் குவாரி


சென்னையை அடுத்த பம்மல், அனகாபுத்தூர் கல்குவாரி நீரை மக்கள் பயன்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்புப் பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி  உத்தரவிட்டுள்ளார்.
சென்னையை அடுத்த புறநகர்ப் பகுதிகளான பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகளில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. செம்பரம்பாக்கம் கூட்டுக் குடிநீர் திட்டம், பாலாறு குடிநீர் திட்டம் மூலம் போதிய அளவு குடிநீர் கிடைக்காத நிலையில், குடிநீர் வடிகால் வாரியம் வழங்கும் குறைந்த அளவிலான தண்ணீரை மாதம் இருமுறை வழங்கும் நிலை உள்ளது.
குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் முன்னாள் நகராட்சிகள் ஆணையர் பிரகாஷ், பம்மல் காமராஜபுரத்தில் உள்ள செங்கழுநீர் கல்குவாரியில் தேங்கி உள்ள தண்ணீரை பயன்படுத்த ரூ 6.5 கோடி செலவில் இரு நகராட்சிகளுக்கும் தனித்தனி சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். 6 மாதங்களில் பம்மல் செங்கழுநீர் குவாரியில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, சோதனை ஓட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பம்மல் நகராட்சி நிர்வாகம் சார்பில் குவாரிகளில் இருந்து பெறப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட நீரைக் குடிநீராகப் பயன் படுத்த உகந்ததாக  உள்ளதா என்று அறிய மாநில சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிண்டி ஆராய்ச்சி மைய நீர் பரிசோதனை துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கிண்டி ஆராய்ச்சி மையம் நீரை பரிசோதனை செய்து
முடிவு தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மாநில பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமியிடம் கேட்டபோது, கல்குவாரி, ஏரி, குளங்களில் இருந்து பெறப்படும் நீரைக் குடிநீராகப் பயன்படுத்தக்கூடாது. நீரை உரிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வடிகட்டி, சுத்தப்படுத்தி குளோரின் கலந்து குடிநீராகப் பயன்படுத்த தகுதி உள்ளதா என்பதை பரிசோதனை செய்த பிறகே  அனுமதிக்க முடியும்.
நீரின் தன்மை குறித்து பரிசோதனைக்கு அனுப்பிய 3 நாட்களில் பரிசோதித்து உடனடியாக முடிவு தெரிவிக்க வேண்டும். என்ன காரணத்தினால் தாமதம் என்று தெரியவில்லை. குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் இது குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
பம்மல், அனகாபுத்தூர் கல்குவாரி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com