சுடச்சுட

    

    ஆசிய போட்டியில் தங்கம் வென்ற நீச்சல் வீரர் சாலை விபத்தில் பலி

    By DIN  |   Published on : 16th May 2019 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    balakrishnan


    சென்னை அரும்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் நீச்சல் வீரர் உயிரிழந்தார்.
    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
    சென்னை ஷெனாய் நகர் ஜெயலட்சுமி காலனியைச் சேர்ந்தவர் ப.பாலகிருஷ்ணன் (29). நீச்சல் வீரரான இவர், கடந்த 2010-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். தற்போது மென்பொருள் பொறியாளராக, அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். விடுமுறையையொட்டி அண்மையில் அவர் சென்னை வந்தார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பாலகிருஷ்ணன், தனது மோட்டார் சைக்கிளில் அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அந்த மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பாலகிருஷ்ணனின் உறவுப் பெண் இருந்தாராம். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த சிமெண்ட் கலவை லாரியை முந்திச் செல்ல பாலகிருஷ்ணன் முயன்றார். இதில் மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறியதில், அதில் இருந்து பாலகிருஷ்ணனும்,அந்த பெண்ணும் கீழே விழுந்தனர். இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். 
     இது குறித்து தகவலறிந்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பாலகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, அந்த லாரியின் ஓட்டுநர்  சு.சுப்பிரமணியன் (32) என்பவரை கைது செய்தனர்.  முதல் கட்ட விசாரணையில், விபத்தில் சிக்கிய இரு வாகனங்களும் வேகமாக வந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai