நண்பர்களின் காரை அடமானம் வைத்தவர் கைது
By DIN | Published On : 16th May 2019 04:24 AM | Last Updated : 16th May 2019 04:24 AM | அ+அ அ- |

நண்பர்களிடம் காரை வாங்கிச் சென்று வெளியூர்களில் அடமானம் வைத்த நபரை தாம்பரம் போலீஸார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், சாமியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அபுபக்கர். இவர், பிரியாணிக் கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் சதீஷ்குமார் (27), அவசர வேலையாக வெளியூருக்கு குடும்பத்துடன் செல்ல கார் வேண்டும் என அபுபக்கரிடம் கேட்டு காரை வாங்கிச் சென்றுள்ளார். பல நாள்கள் ஆகியும், சதீஷ்குமார் காரை திருப்பித் தராமல் தலைமறைவாக இருந்து வந்ததால் அவர் மீது சந்தேகமடைந்த அபுபக்கர், தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனையடுத்து போலீஸார் தலைமறைவாக இருந்த சதீஷ்குமாரை இரு தினங்களுக்கு முன் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது, காரை அவர் ஓசூரில் அடமானம் வைத்து இருப்பதாகக் கூறினார். மேலும், விசாரணையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இதேபோல் கிழக்கு தாம்பரம் தியாகராஜனிடம் காரை வாங்கி சென்று திருநெல்வேலியில் அடமானம் வைத்ததும் தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸார், அடமானம் வைக்கப்பட்ட இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.