முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
அபாகஸ் கணிதப் போட்டி: சென்னை மாணவி சாதனை
By DIN | Published On : 18th May 2019 06:58 AM | Last Updated : 18th May 2019 06:58 AM | அ+அ அ- |

மாணவி ஏ.கலைமதி
தாம்பரம்: சென்னையை அடுத்த படப்பை ஆல்வின் சர்வதேசப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி கலைமதி, உலக அளவில் மிகக் குறைந்த வயதில் அபாகஸ் கணிதப் பயிற்சியின் 8 படி நிலைகளையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
அவருடைய இந்தத் திறமையைப் பாராட்டி, "ஹைரேஞ்ச்' எனும் உலக சாதனைப் புத்தகம் சான்றிதழ் வழங்கி உள்ளது.
தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் காரைக்குடி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகராஜ்-கவிதா தம்பதியின் மகள் கலைமதி (5). படப்பையில் உள்ள ஆல்வின் சர்வதேசப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த ஜனவரியில், தாம்பரத்தில் நடந்த தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் "டாப்பர் ஆப் டாப்பர்' என்ற நிலையிலும், பிப்ரவரியில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் "சாம்பியன் ஆப் சாம்பியன்' என்ற நிலையிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து கலைமதியின் தாய் கவிதா கூறியது:
கலைமதிக்கு மூன்று வயதிலேயே அபார நினைவாற்றல்,கணிதத் திறன் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். அந்தத் திறமையை மேம்படுத்தும் வகையில் அபாகஸ் பயிற்சியில் சேர்த்தோம். இந்தப் பயிற்சியை வேகமாகக் கற்றுக்கொண்ட அவர், 8 நிலைகளையும் ஒரே ஆண்டில் கற்று தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் என்றார்.
இதுகுறித்து பள்ளியின் தாளாளர் என். விஜயன் கூறுகையில், "பெற்றோர், பள்ளிக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்து இருக்கும் மாணவி கலைமதி, எதிர்காலத்தில் மறைந்த கணித மேதை ராமானுஜத்தைப் போல் உலகப் புகழ் பெற்றுத் திகழ்வார்' என்றார்.