பயணிகளின் வரவேற்பை பெற்ற "தேஜஸ்' அதிவிரைவு ரயில்

சென்னை - மதுரை இடையே ஆறரை மணி நேரத்தில் இயக்கப்படும் அதி விரைவு ரயிலான "தேஜஸ்' ரயில் சேவைக்கு பயணிகள்  மத்தியில்  வரவேற்பு அதிகரித்துள்ளது.
மதுரையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு வரும் 'தேஜஸ் அதிவிரைவு ரயிலில் பயணிப்போர்.
மதுரையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு வரும் 'தேஜஸ் அதிவிரைவு ரயிலில் பயணிப்போர்.

சென்னை - மதுரை இடையே ஆறரை மணி நேரத்தில் இயக்கப்படும் அதி விரைவு ரயிலான "தேஜஸ்' ரயில் சேவைக்கு பயணிகள்  மத்தியில்  வரவேற்பு அதிகரித்துள்ளது.  மார்ச் 2-ஆம் தேதி முதல் மே 17-ஆம் தேதி வரை (இரண்டரை மாதத்தில்) சென்னை-மதுரை இடையே இருமார்க்கத்தில்  ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 651 பேர் இதில் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம், ரூ.10 கோடியே 43 லட்சத்து 21 ஆயிரத்து 211 வருவாய்  ஈட்டியுள்ளது.

ஆறரை மணி நேரத்தில் சென்றடையும்: நவீன வசதிகளுடன் அதி வேகத்தில் செல்லக்கூடிய சொகுசு ரயிலான "தேஜஸ்' ரயிலை சென்னை பெரம்பூர் இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) தயாரித்து, தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. இதையடுத்து,  சென்னை-மதுரை இடையே இந்த ரயில் சேவை மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயில்  சென்னையில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு, மதுரைக்கு மதியம் 12.30 மணிக்கு சென்றடைகிறது. 

இதுபோல, மறுமார்க்கமாக,  மதுரையில் இருந்து மதியம் 3 மணிக்குப் புறப்பட்டு, சென்னைக்கு இரவு 9.30 மணிக்கு வந்தடைகிறது. திருச்சி, கொடை ரோடு ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த ரயில் நின்று செல்லும். வாரத்தில், வியாழக்கிழமை தவிர மற்ற 6 நாள்களும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. 

சென்னை-மதுரை இடையேயான 496 கி.மீ. தூரத்தை 6 மணி நேரம், 30 நிமிஷத்தில் அடையும் இந்த ரயிலில் ஒரு எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் பெட்டியும்,  12 வழக்கமான சேர் கார் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில்  56 இடங்களும், வழக்கமான சேர் காரில் 78 இடங்களும் உள்ளது. இந்த ரயிலில் ஆரம்பத்தில் பயணிகள் வருகை குறைவாக இருந்தது. சனிக்கிழமைகளில் மட்டும் முழுமையாக நிரம்பி வழிந்தது. மற்ற நாள்களில் பயணிகள் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்பட்டது.

கோடைக் காலம் தொடங்கிய பிறகு, இந்த ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. இதன்பிறகு, சென்னை-மதுரை, மதுரை-சென்னை ஆகிய இருமார்க்கத்திலும் இந்த ரயிலில் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது.    

1 லட்சம் பேர் பயணம்: இந்நிலையில்,  "தேஜஸ்'  ரயிலுக்கு தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இதுவரை இந்த ரயிலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ளனர்.  மார்ச் 2-ஆம் தேதி முதல்  மே 17-ஆம் தேதி வரை சென்னை-மதுரை இடையே இருமார்க்கத்திலும் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 651 பேர் இந்த ரயிலில் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம், ரூ.10 கோடியே 43 லட்சத்து 21 ஆயிரத்து 211 வருவாய்  ஈட்டியுள்ளது. மார்ச் 2-ஆம் தேதி முதல்  மே 17-ஆம் தேதி வரை எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் வகுப்பில்  3,200 பேரும்,  வழக்கமான சேர் கார் வகுப்பில் 47,808 பேரும் என மொத்தம் 51,008 பேர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் மொத்தம்  ரூ.4 கோடியே 83 லட்சத்து 672 வருவாய் கிடைத்துள்ளது. மறுமார்க்கமாக, மதுரை-சென்னை இடையே  எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் வகுப்பில் 3,336 பேரும், வழக்கமான சேர் கார் வகுப்பில் 51,307 பேரும் என மொத்தம் 54,643 பேர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம், மொத்தம் ரூ.5 கோடியே 60 லட்சத்து 20 ஆயிரத்து 569 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இருமார்க்கத்திலும் சேர்த்து மொத்தம் ரூ.10 கோடியே 43 லட்சத்து 21 ஆயிரத்து 211 ரயில்வே நிர்வாகத்துக்கு வருவாய்  கிடைத்துள்ளது.

கழிவறை பிரச்னைக்குத் தீர்வு: இது குறித்து  ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறியது: "தேஜஸ்' ரயிலுக்கு தற்போது வரவேற்பு அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் கட்டணம் உயர்வு என்று கருத்து தெரிவித்தனர். ஆனாலும், இதில் செய்யப்பட்டுள்ள உலகத் தர வசதிகள், பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன. இதனால், பயணிகள் வருகை அதிகரிக்கத்தொடங்கியது. ஏப்ரல், மே மாதங்களில் வழக்கத்தைவிட  அதிக பயணிகள் பயணம் செய்துள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் பயோ கழிவறையில் பிரச்னை இருந்தது. இது தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த ரயிலில் சிறப்பு வசதிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பயணிகளின் கருத்துகளை கேட்டு, அதுகுறித்து ஆய்வுக்  கூட்டத்தில் பேசப்படுகிறது. 


"தேஜஸ்' ரயிலில் தரமான உணவு இல்லை, தமிழ் பாடல்கள் இல்லை என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்தும் ஆலோசிக்கிறோம். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், தமிழ் பாடல்கள் இல்லாத இடங்களில் பாடல்கள் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பயணிகளுக்கு தரமான வசதிகள், உணவு  ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார் அவர்.


நவீன வசதிகள்: ஜி.பி.எஸ். அடிப்படையிலான பயணிகள் தகவல் அறியும் வசதி, எல்.ஈ.டி. விளக்குகள், ரயில் பெட்டியின் உள்புறமும், வெளிப்புறமும் தானியங்கி கதவுகள் வசதி, செல்லிடப்பேசி சார்ஜ் செய்யும் வசதி,  ரயில் பெட்டிகளின் உள்புறம் மற்றும் நுழைவு வாயில்களில் கண்காணிப்பு கேமரா, பயோ கழிவறைகள் போன்ற பல்வேறு வசதிகள் இந்த ரயிலில் இடம்பெற்றுள்ளன. 


இது குறித்து ரயில்வே இயந்திரவியல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியது: பெட்டிகள் அனைத்திலும் 100 சதவீதம் பாதுகாப்பான தானியங்கி  கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட  சில நிமிஷத்தில் கதவுகள் தானாக மூடிவிடும். ஒவ்வொரு பெட்டியிலும், 6 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமரா பதிவுகளை ரயில்வே அதிகாரிகள் மானிட்டர் மூலம் கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தீயணைப்புக் கருவிகள், தீத்தடுப்பு அலாரம் உள்பட 23 சிறப்பு அம்சங்கள் தேசஸ் ரயிலில் இடம்பெற்றுள்ளன என்றார் அவர்.


செல்லும் இடம்    வகுப்பு     பயணிகள்    வருவாய் (ரூபாய்)

சென்னை-மதுரை    சேர் கார்    47,808    4,24,34,185

சென்னை-மதுரை    எக்ஸிக்யூட்டிவ் கார்       3,200         58,66,487
        மொத்தம்    51,008    4,83,00,672  
செல்லும் இடம்    வகுப்பு    பயணிகள்     வருவாய் (ரூபாய்)
மதுரை-சென்னை    சேர் கார்     51,307    4,94,79,684
மதுரை-சென்னை    எக்ஸிக்யூட்டிவ்       3,336         65,40,855
        மொத்தம்    54,643    5,60,20,539   
(மார்ச் 2-ஆம் தேதி முதல் மே 17-ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட விவரம்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com