Enable Javscript for better performance
சென்னை ஏரிகளில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடும் வறட்சி: மாற்று ஏற்பாடுகளை எதிர்நோக்கும் குடிநீர் வாரிய- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சென்னை ஏரிகளில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடும் வறட்சி: மாற்று ஏற்பாடுகளை எதிர்நோக்கும் குடிநீர் வாரியம்

    By DIN  |   Published On : 28th May 2019 05:23 AM  |   Last Updated : 28th May 2019 01:03 PM  |  அ+அ அ-  |  

    lake


    சென்னை ஏரிகளில் கடந்த 1999-ஆம் ஆண்டுக்குப் பிறகு நீர் இருப்பு 100 மில்லியன் கன அடிக்கு கீழ் குறைந்துள்ளது. 

    இதனால் சென்னை மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள், கல் குவாரிகள், விவசாயக் கிணறுகள் போன்ற பிற குடிநீர் ஆதாரங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த 4 ஏரிகள் வடகிழக்குப் பருவமழையை நம்பியே உள்ளன.  இந்த நிலையில், கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சராசரி அளவைக் காட்டிலும்  மிகவும் குறைவாக பெய்தது. இதனால், ஏரிகளின் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை. இதனால், கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெற தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது. அதன் விளைவாக, ஆந்திரப் பிரதேச அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டது. 1 டிஎம்சி வரை தண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், 372 மில்லியன் கன அடி (0.37 டிஎம்சி) தண்ணீர் மட்டுமே நீர் கிடைத்தது. 

    இதனால், தற்போது குடிநீர் தேவையைப்  பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 1,080 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியும், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியும் கடந்த 10 நாள்களுக்கு முன்பே வறண்டு விட்டன. இதனால், அந்த ஏரிகளில் இருந்து தண்ணீர்  எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 79 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. மேலும், 3,330 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 7 மில்லியன் கன  அடி மட்டுமே உள்ளது. இதில், புழல் ஏரியில் இருந்து தற்போது தினசரி 21 கனஅடி தண்ணீர் வீதம் மோட்டர் பம்ப் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் இந்த ஏரியும் வறண்டு விடும் என்பதால், அங்கு தண்ணீர் எடுப்பது நிறுத்தப்படும். 

    அதே நேரத்தில் பூண்டி ஏரியில் மட்டும் அடுத்த சில நாள்கள் வரை தண்ணீர் எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு ஏரிகளில் இருந்து தண்ணீர் பெற முடியாத நிலையில், அடுத்த கட்டமாக தண்ணீர் எங்கிருந்து பெறலாம் என்ற முயற்சியில்  குடிநீர் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

    மேலும், 1,458 கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் 838 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

    இன்னும் ஐந்து நாள்களில்...: இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியது:  சென்னை ஏரிகளில் கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் 3,010 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது.  

    இதையடுத்து வந்த மாதங்களில் பருவமழை மிகவும் குறைவாக இருந்தது. அதேவேளையில் தண்ணீர் தேவை தொடர்ந்து அதிகரித்ததால் ஏரிகளின் நீரை முடிந்த அளவுக்குப் பயன்படுத்தினோம். இதனால் நீர் இருப்பு குறைந்து தற்போது 89 மில்லியன் கனஅடி மட்டுமே இருப்பு உள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் மிகவும் குறைவான நீர் இருப்பு ஆகும். இதைக் கொண்டு இன்னும் ஐந்து  நாள்கள் வரை மட்டுமே குடிநீர் விநியோகிக்க முடியும். 

    இதையடுத்து விவசாயக் கிணறுகள், நெம்மேலி- மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள், வீராணம் ஏரி,  ரெட்டேரி,  கல் குவாரிகள், நெய்வேலி சுரங்க நீர் என பிற நீர் ஆதாரங்களை குடிநீர் விநியோகத்துக்காக முழுமையாகப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்றனர். 



    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp