தண்ணீர் பற்றாக்குறை: கட்டுமானப் பணிகள் பாதிப்பு

சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், கட்டுமான தொழில் முடங்கிவிடும் சூழல் ஏற்படும் என கட்டுமானத் தொழில்


சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், கட்டுமான தொழில் முடங்கிவிடும் சூழல் ஏற்படும் என கட்டுமானத் தொழில் நிறுவனத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
நாட்டில் அதிவேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் சென்னை முக்கிய இடத்தை வகிக்கிறது. நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் சென்னையில் ஆண்டுக்கு 75 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான அடுக்குமாடிக் குடியிருப்புகள், தனி வீடுகளும், சுமார் ஒன்றரை கோடி சதுர அடி பரப்பிலான வணிகக் கட்டடங்களும் கட்டப்படுகின்றன. இதில், 15 ஆயிரம் சதுர அடி கட்டுமானத்துக்கு சுமார் 30 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. சென்னையில் பெரும்பாலான கட்டுமானப் பணிகள் தனியார் தண்ணீர் லாரிகளையே நம்பி நடைபெறுகின்றன. சென்னையின் கட்டுமானப் பணிக்கு திருவள்ளூர் மாவட்டத்தின் அய்யப்பாக்கம், ஆவடி, காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.    
இந்நிலையில், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கட்டுமான நிறுவன நிர்வாகிகள் கூறுகையில், கட்டுமானப் பணிக்குத் தனியார் தண்ணீர் லாரிகளே நம்பி உள்ளோம். தற்போது, தண்ணீருக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாட்டால், குடியிருப்புப் பகுதிகளுக்கே தண்ணீர் விநியோகிக்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக  ரூ. 1,500 ஆயிரம் முதல் ரூ. 2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு டேங்கர் லாரி, தற்போது,  ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. 
சில கட்டுமான இடங்களில் ஆழ்துளைக் கிணறு அமைத்து  அதிலிருந்து பெறப்படும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. சில இடங்களில் ஆழ்துளைக் கிணற்று நீர் அதிக உப்புத்தன்மை கொண்டுள்ளதால் அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை, தண்ணீரைக் கொண்டு வரப்படுவதில் ஏற்படும் காலதாமதம் காரணமாக 5 முதல் 10 சதவீத கட்டுமானப் பணிகள் பாதிகப்பட்டுள்ளன. உரிய நேரத்தில் மழை பெய்யாமல் இதே நிலை நீடித்தால், கட்டு
மானப் பணிகளை உரிய நேரத்தில் முடிப்பதில் கடும் சுணக்கம் ஏற்படுவதுடன், தண்ணீருக்காக அதிக தொகையும் செலவழிக்க நேரிடும் என்றனர்.
இதுகுறித்து தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கூறுகையில், கடுமையான வறட்சி காரணமாக புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் முழுவதும் வறண்டுவிட்டன. தண்ணீருக்காக அதிக தொலைவில் உள்ள கிராமங்களைத் தேடித்தான் செல்ல வேண்டி உள்ளது. 
இதனால்,  நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் தண்ணீர் எடுக்க முடிகிறது. அதிக தொலைவு சென்று வருவதால்தான் தண்ணீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com