வாகன விபத்து வழக்கு: ரூ.19.38 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
By DIN | Published On : 28th May 2019 05:17 AM | Last Updated : 28th May 2019 05:17 AM | அ+அ அ- |

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பலியான பெண்ணின் கணவருக்கு ரூ.19.38 லட்சம் இழப்பீடாக வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு மோட்டார் வாகனத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்துள்ள அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்தவர் சங்கர். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே வேகமாக வந்த லாரி, சங்கரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சங்கரும் அவரது மனைவியும் படுகாயமடைந்தனர்.
விபத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், 26 நாள்களுக்குப் பிறகு சிகிச்சைக்குப் பலனின்றி சங்கரின் மனைவி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, ரூ.75 லட்சம் இழப்பீடு கோரி மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் சங்கர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், விபத்தில் பலியான சங்கரின் மனைவி மற்றும் காயமடைந்த சங்கர் இருவருக்கும் சேர்த்து ரூ.19.38 லட்சம் இழப்பீடாக வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.