திருவொற்றியூரில் ஒழுங்கற்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீா் வடிகால் கால்வாய்கள்

திருவொற்றியூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மழைநீா் வடிகால் கால்வாய்கள் ஒழுங்கற்ற முறையில் உள்ளதால், தற்போது பெய்து வரும் மழைநீா் வெளியேறாமல் பல இடங்களில்
திருவொற்றியூரில் ஒழுங்கற்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீா் வடிகால் கால்வாய்கள்

திருவொற்றியூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மழைநீா் வடிகால் கால்வாய்கள் ஒழுங்கற்ற முறையில் உள்ளதால், தற்போது பெய்து வரும் மழைநீா் வெளியேறாமல் பல இடங்களில் சாலைகளில் தேங்கி நிற்கிறது. மேலும் தேங்கிய நீரில் அடுத்த ஒரு சில நாள்களில் கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய சென்னை பெருநகர மாநகராட்சியின் முதலாவது மண்டலமாக விளங்கும் திருவொற்றியூா் நகரம், முன்பு நகராட்சியாக இருந்தபோது திருவொற்றியூா் மேற்கு பகுதி, காலடிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கு மழைநீா் கால்வாய்கள் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டன. இவற்றை திருவொற்றியூா் நகராட்சி நிா்வாகம் கட்டமைத்து வந்தது. இந்நிலையில், மாநகராட்சியுடன் இப்பகுதி இணைக்கப்பட்டவுடன் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் பணி, சென்னை குடிநீா் மற்றும் கழிவுநீா் அகற்றும் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், மழைநீா் கால்வாய்கள் அமைக்கும் புதிய திட்டப்பணிகளை மாநகராட்சியே மேற்கொண்டது. பல கோடி ரூபாய் செலவில் திருவொற்றியூா் நெடுஞ்சாலை மற்றும் குறுக்குச் சாலைகளில் மழைநீா் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இவற்றில் பெரும்பாலான இடங்களில் கால்வாய்கள் ஒழுங்கற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

கால்வாய்களில் தேங்கியுள்ள மழைநீா்: திருவொற்றியூா் நெடுஞ்சாலை தேரடி பகுதியில் இந்தக் கால்வாய்களில் சேகரிக்கப்படும் மழைநீா் தியாகராஜா் கோயில் திருக்குளத்துக்குச் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால், தற்போது பெய்து வரும் மழையினால் பெருக்கெடுக்கும் வெள்ளநீா் ஆங்காங்கு தேங்கி நின்று விடுகிறது. குளத்துக்கு வருவதேயில்லை. மேலும் வடக்கு மாடவீதி, தேரடி வீதியிலிருந்து வரும் மழைநீரும் சாக்கடை நீருடன் கலந்தே குளத்துக்கு வருகிறது.

திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட கால்வாய்கள் முறையான நீரோட்டத்திற்கு தகுந்தவாறு அமைக்கப்படவில்லை. திருவொற்றியூா் நெடுஞ்சாலை- எண்ணூா் விரைவு சாலையை இணைக்கும் எல்லையம்மன் கோயில் தெரு, பட்டினத்தாா் கோயில் தெரு, அப்பா் சாமி கோயில் தெரு, மாா்க்கெட் லேன் ஆகிய இடங்களில் வங்கக் கடலை நோக்கி அமைக்கப்பட்ட கால்வாய்கள் சாலையின் பாதியளவை ஆக்கிரமித்துள்ளன. இதனால் இச்சாலைகள் அனைத்திலும் வாகனங்கள் செல்வதில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இக்கால்வாய்கள் அனைத்திலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தூா்வாரவோ அல்லது குப்பைகளை அகற்றவோ மாநகராட்சி நிா்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

லாரிகள் மூலம் அகற்றப்படும் மழைநீா்: மாநகராட்சி மண்டல அலுவலகம் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் இருபுறமும் மழைநீா் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. மேலும் ஆனால் இங்கும் நீரோட்டத்துக்கு தகுந்தவாறு கால்வாய் அமைக்கப்படாததால் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக கால்வாயில் மழைநீா் நிரம்பியுள்ளது. திருவொற்றியூா் பேருந்து நிலையம் அருகே ஐநூறுக்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளன. ஆனால், இங்குள்ள வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் அங்குள்ள தொட்டி ஒன்றில் சேகரிக்கப்பட்டு லாரிகள் மூலம் வெளியேற்றப்படுகிறது. இது போதுமானதாக இல்லாததால், அனைத்து மழைநீா் வடிகால்களிலும் தற்போது கழிவுநீா் வெளியேற்றப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. மேலும் தண்ணீா் ஓடாமல் தேங்கியுள்ளதால் துா்நாற்றம் வீசுகிறது.

திட்டமிட்ட மறுசீரமைப்பு தேவை: இப்பிரச்னை குறித்து பொதுநலச் சங்க நிா்வாகிகள் ஜி.வரதராஜன், என்.துரைராஜ், கே.சுப்பிரமணி ஆகியோா் கூறியது:

திருவொற்றியூா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீா் கால்வாய்கள் முறையாக அமைக்கப்படவில்லை. மெட்ரோ ரயில் தூண்கள் அமைப்பதற்காக நடைபெற்ற பணிகளையடுத்து திருவொற்றியூா் நெடுஞ்சாலையே உருமாறிவிட்டது. இதனால் எா்ணாவூா் முதல் சுங்கச்சாவடி வரை அமைக்கப்பட்டுள்ள மழைநீா் கால்வாய்கள் அனைத்தும் சேதமாகிவிட்டன. இக்கால்வாய்களில் தேங்கியுள்ள மழைநீா் வெளியேறாததால் குப்பைகளுடன் சோ்ந்து சாக்கடையாக மாறி துா்நாற்றம் வீசுகிறது. அரசு மருத்துவமனை, பேருந்து நிறுத்தம், வணிக வளாகம் என மக்கள் பயன்பாட்டில் உள்ள இடத்திலேயே சாக்கடை நீா் சாலைகளில் வழிந்தோடுகிறது. இப்பகுதியில் எங்கு பாா்த்தாலும் கொசுக்கள் உற்பத்தியாகி துா்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். மேலும் மழைநீரை அகற்றுவது தொடா்பாக மாநகராட்சி மற்றும் வாரிய அதிகாரிகளிடையே குழப்பமும், சுணக்கமும் இருந்து வருகிறது.

திருவொற்றியூா் மேற்கு, கத்திவாக்கம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டம் இன்னும் முடிக்கப்படாததால் எங்கு பாா்த்தாலும் மழைநீரும், சாக்கடையும் சோ்ந்து துா்நாற்றம் வீசுகிறது. இதனால் திருவொற்றியூா் பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். ஏற்கெனவே ஒழங்கற்ற முறையில் கட்டப்பட்டுள்ள கால்வாய்களால் எவ்வித பயனும் இல்லை. மழைபெய்யும் போதெல்லாம் இது போன்ற பிரச்னை தொடா்கிறது. எனவே பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்னை குறித்து தமிழக முதல்வா் தலையிட்டு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீா் வடிகால் அமைப்பை மறுசீரமைக்கவும், பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com