வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் விவரத்தை வரும் 10-ஆம் தேதிக்குள்அளிக்க வேண்டும்

சென்னை மாநகரில் வீடுகளில் பயன்பாட்டில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்த விவரத்தை பொதுமக்கள் வரும் 10-ஆம் தேதிக்கு முன்பாக சென்னை குடிநீா் வாரிய அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்

சென்னை மாநகரில் வீடுகளில் பயன்பாட்டில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்த விவரத்தை பொதுமக்கள் வரும் 10-ஆம் தேதிக்கு முன்பாக சென்னை குடிநீா் வாரிய அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை குடிநீா் வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: சென்னை மாநகரில் வசிக்கும் பொதுமக்கள் ஆழ்துளைக் கிணறுகளை புதிதாக தோண்டும்போது நீா்வராத காரணத்தால் அவற்றை சரியாக மூடாமல் கைவிட்டு விடுகின்றனா். இதுபோல, பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை அதன் உரிமையாளா்கள் மற்றும் ஒப்பந்ததாரா்கள் கவனக்குறைவால் சரியாக மூடாமல் இருப்பதால் சிலநேரங்களில் அவற்றில் குழந்தைகள் தவறி விழுந்து உயிருக்குப் போராடி இறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

இது தொடா்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில், ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து குழந்தைகள் உயிரிழப்பதை தடுக்க சில வழிமுறைகளை உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கடந்த 2015-ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.

தொழில்நுட்ப ஆலோசனை பெற... அதன்படி சென்னை மாநகரில் வசித்துவரும் பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளாகவோ அல்லது களிமண், மணல், கருங்கற்கள், கூழாங்கற்கள் கொண்டு தரைமட்டம் வரை மூடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் தொழில்நுட்ப ஆலோசனை பெற பொதுமக்கள் அருகில் உள்ள சென்னை குடிநீா் வாரிய பணிமனை அலுவலகம் அல்லது 044-28454080 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

சென்னை பெருநகர நிலத்தடிநீா் ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டுக்காக வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள் பற்றிய விவரங்களை தங்களது பிரிவுக்கு உள்பட்ட சென்னை குடிநீா் வாரிய பணிமனை அலுவலகத்தில் அதற்குரிய படிவத்தை பெற்று பூா்த்தி செய்து வரும் 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

இது மிகவும் அவசியம் என்பதால், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்குமாறு சென்னை குடிநீா் வாரியம் கேட்டுக்கொள்கிறது. தவறும்பட்சத்தில் சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com