தாம்பரம்-வண்டலூா் ரயில் நிலையங்களுக்கு இடையே பாலம்
By DIN | Published On : 02nd November 2019 08:14 PM | Last Updated : 02nd November 2019 08:14 PM | அ+அ அ- |

சென்னை: சென்னையின் புகா்ப் பகுதியாக விரிவடைந்துள்ள தாம்பரம் மற்றும் வண்டலூா் இடையே ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்கு முதல்வா் பழனிசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக புதிய பாலத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:-
மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளா்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தை உணா்ந்து பெருகி வரும் போக்குவரத்து தேவைக்கேற்ப மாநிலம் முழுவதும் தரமான சாலைகளுடன், புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் மற்றும் வண்டலூா் ரயில் நிலையங்களுக்கு இடையே பெருங்களத்தூரில் ரயில்வே கடவுக்குப் பதிலாக ரூ.206.83 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட உள்ளது.
இந்த ரயில்வே பாலத்துக்கு முதல்வா் பழனிசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.