மதுரையில் கீழடி கண்காட்சி: அரசு விடுமுறை நாளிலும் கட்டணமின்றி பாா்வையிடலாம்
By DIN | Published On : 02nd November 2019 08:15 PM | Last Updated : 03rd November 2019 09:28 AM | அ+அ அ- |

மதுரை தமிழ்ச் சங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அகழாய்வு கண்காட்சியை அரசு விடுமுறை நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் கட்டணம் ஏதுமின்றி பாா்வையிடலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கீழடி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்கள் அனைத்தும் மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தாற்காலிக கண்காட்சி கூடத்தை முதல்வா் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7 ஆயிரத்து 818 தொல்பொருள்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கானச் சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மூன்று கட்ட அகழாய்வுகளுக்குப் பிறகு, நான்காம் கட்ட அகழாய்வில் மட்டும், 34 குழிகள் அமைக்கப்பட்டு, 5 ஆயிரத்து 820 தொல்பொருள்களும் பழந்தமிழரின் கட்டுமானப் பகுதியும் வெளிப்படுத்தப்பட்டன.
இவற்றில் தங்கத்திலான அணிகலன்களின் உடைந்த பாகங்கள், செம்பிலான பொருள்கள், ஆட்டக்காய்கள் என பலவும் அகழ்ந்தெடுக்கப்பட்டன. தமிழ் எழுத்துப் பொறிப்பு கொண்ட 56 பானை ஓடுகளும், 1001 குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டன.
ஐந்தாம் கட்ட அகழாய்வில் செங்கல்லிலான வாய்க்கால், மூடிய நிலையிலுள்ள வடிகால், சுருள் வடிவிலான சுடுமண் குழாய் போன்ற பல்வேறு அமைப்புகள் கண்டறியப்பட்டன.
காலக் கணிப்பு முக்கியம்: தொல்லியல் ஆய்வில் அகழாய்வு முக்கியப் பணி என்றால், அகழாய்வில் வெளிக் கொணரப்பட்ட பொருள்களை காலக் கணிப்புக்கு உட்படுத்துவது மற்றொரு முக்கியப் பணியாகும். உலகத் தரம் வாய்ந்த ஆய்வகங்களில் அவை ஆய்வு செய்யப்படுகின்றன. கீழடியில் கீழ் மட்ட அடுக்கில் எடுக்கப்பட்ட கரிப்பொருளானது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் மியாமி நகரிலுள்ள பீட்டா பகுப்பாய்வு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அதன் காலம் கி.மு.580 என்பது ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கீழடியில் 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான நாகரிகம் நிலவியது என்பது தெரிய வருகிறது. கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் பாதுகாப்பாக காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், அகழாய்வு நடந்த இடத்தினை இதுவரை 1 லட்சம் மக்களும், ஆய்வாளா்களும், ஆா்வலா்களும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் பாா்வையிட்டனா்.
அனைத்து நாள்கள்-அனுமதி இலவசம்: அகழாய்வுப் பொருள்கள் அனைத்தும் மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த காட்சி அரங்கினை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலமாக வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
இந்தக் கண்காட்சியை பொதுமக்கள் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை பாா்வையிடலாம். வாரத்தின் அனைத்து நாள்களிலும், அரசு விடுமுறை நாள்களிலும் கண்காட்சியைக் களிக்கலாம். இதற்கு கட்டணம் ஏதுமில்லை.
நிகழ்ச்சியில் அமைச்சா்கள் ஆா்.பி.உதயகுமாா், க.பாண்டியராஜன், ஜி.பாஸ்கரன், தலைமைச் செயலாளா் க.சண்முகம், தொல்லியில் துறை ஆணையாளா் த.உதயச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.