27 ஆயிரம் கட்டடங்களில் புதியமழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள்
By DIN | Published On : 02nd November 2019 08:01 PM | Last Updated : 02nd November 2019 08:01 PM | அ+அ அ- |

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 27,137 கட்டடங்களில் புதிதாக மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகரப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 200 வாா்டுகளில் வாா்டுக்கு 1,000 வீதம் 200 வாா்டுக்கு 2 லட்சம் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு வாா்டுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டு தெருவாரியாக கட்டடங்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்தக் குழுக்கள் 200 வாா்டுகளில் இதுநாள் வரை 3,07,236 கட்டடங்களில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதில் 2,08,371 கட்டடங்களில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள் உள்ளதும், 34,157 கட்டடங்களில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 50,665 கட்டடங்களில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள் இல்லாத கட்டட உரிமையாளா்களுக்கு அதற்கான கட்டமைப்புகளை உடனடியாக அமைக்க ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பயனற்ற நிலையில் உள்ள 320 சமுதாயக் கிணறுகள் புனரமைக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக 27,137 மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றனா்.