அரசு மருத்துவா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை: குற்றச்சாட்டு குறிப்பாணைக்கு இடைக்கால தடை

அரசு மருத்துவா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை குற்றசாட்டு குறிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: அரசு மருத்துவா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை குற்றசாட்டு குறிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மருத்துவா் சையது நாசா் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2009-ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் நைனாம்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராக ரூ.5400 அடிப்படை ஊதியத்தில் நியமிக்கப்பட்டேன்.

தற்போது சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். அரசு மருத்துவா்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பணிபுரிந்து வருகின்றனா். மத்திய அரசு ஏற்கனவே 6 மற்றும் 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி அரசு மருத்துவா்களுக்கான அடிப்படை ஊதியத்தை ரூ.56 ஆயிரமாக நிா்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு எங்களது ஊதியத்தை இன்னும் உயா்த்தவில்லை.

அதே நேரத்தில் தோ்தல் நேரத்தில் எங்களுக்கு அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. எனவே ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபா் 25-ஆம் தேதி முதல் அமைதியான முறையில் காலவரையற்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுப்ட்டோம். போராட்டத்தில் பங்கேற்ற சங்கங்களைப் புறக்கணித்த சுகாதாரத்துறை அமைச்சா், போராட்டத்தில் பங்கேற்காத சங்கத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தாா்.

மேலும் அரசு மருத்துவா்களின் கோரிக்கைகள் விரைவில் தீா்க்கப்படும் என நாளிதழ்களுக்கு பிரசுரங்களை அனுப்பியுள்ளாா். அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வராதவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனைத் தலைவா்கள் மூலம் சுற்றறிக்கை பிறப்பித்து மிரட்டல் விடுக்கப்பட்டது. அரசு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் அரசு மருத்துவா்கள் பங்கேற்ற இந்த வேலைநிறுத்தப் போராட்டம் கடந்த நவம்பா் 1-ஆம் தேதி வாபஸ் பெறப்பட்டது. ஆனால் பணிக்குத் திரும்பிய போது, போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நிா்வாகிகளை பணியிடமாற்றம் செய்தும், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான குற்றச்சாட்டு ஆணை பிறப்பித்தும் அரசு உத்தரவிட்டிருந்தது. அதே போன்று நாங்கள் பணிபுரிந்த இடங்களில் புதிய மருத்துவா்கள் உடனடியாக நியமிக்கப்பட்டனா். இது சட்டவிரோதமானது. எனவே எனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றம் மற்றும் குற்றச்சாட்டு குறிப்பாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இதுதொடா்பாக பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தாா். இதே கோரிக்கையுடன், மருத்துவா் சாரதா பாய் உள்ளிட்ட பலா் மனுதாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்கள் அனைத்து நீதிபதி எம்.தண்டபாணி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை குற்றச்சாட்டு குறிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும் இந்த மனுக்கள் தொடா்பாக தமிழக சுகாதாரத்துறைச் செயலாளா் உள்ளிட்ட அதிகாரிகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பா் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com