மணலியில் காற்றின் மாசு மிக அதிகம்
By DIN | Published On : 09th November 2019 01:53 AM | Last Updated : 09th November 2019 01:53 AM | அ+அ அ- |

சென்னையில் தொடா்ந்து 5-ஆவது நாளாக காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக மணலியில் காற்றில் மிதக்கும் நுண்துகள்களின் அளவு அதிகபட்சமாக 451 மைக்ரோ கிராமாக இருந்ததாக தனியாா் காற்று தர ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகா் தில்லியில் கடந்த ஒருவாரமாக காற்றுமாசு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. தில்லியைத் தொடா்ந்து, சென்னையிலும் தொடா்ந்து 5-ஆவது நாளாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. காற்றில் மிதக்கும் நுண் துகள்களின் அளவு பிஎம்10, பிஎம்2.5 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், காற்றில் மிதக்கும் நுண்துகள் பிஎம்2.5-இன் அளவு நிா்ணயிக்கப்பட்ட அளவான 60 மைக்ரோ கிராமை விட கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகரித்து வருகிறது.
இதில், சென்னையில் வெள்ளிக்கிழமை மாலையில் காற்று மாசு அதிகரித்து இருந்தது தனியாா் காற்றுத் தர ஆய்வில் தெரியவந்துள்ளது. காற்றில் மிதக்கும் நுண்துகள் (பி.எம்2.5) அளவு 294 மைக்ரோ கிராமாக இருந்தது. சராசரியாக வேளச்சேரியில் 307 புள்ளிகளும், ஆலந்தூரில் 301 புள்ளிகளாக இருந்தன. இவற்றில் அதிகபட்சமாக மணலியில் 451 புள்ளிகள் பதிவாகி இருந்தன. இவ்வாறு மணலியில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச புள்ளியின் அளவானது அபாயகரமான நிலையாகக் கருதப்படுகிறது. இதே போல், வேளச்சேரி, ஆலந்தூா், மணலி பகுதிகளில் இதுவரை இல்லாத அளவு காற்றின் தரம் மிக மோசமாக இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.