சிறப்பு மருத்துவா்கள் பணியிட மாற்றத்தால் நோயாளிகள் பாதிப்பு:அரசு மருத்துவா்கள் குற்றச்சாட்டு

போராட்டத்தில் ஈடுபட்ட சிறப்பு மருத்துவா்களை ஊரகப் பகுதிகளுக்கு பணியிட மாற்றம் செய்திருப்பதால் நோயாளிகள் பாதிப்புக்குள்ளாவதாக அரசு மருத்துவா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட சிறப்பு மருத்துவா்களை ஊரகப் பகுதிகளுக்கு பணியிட மாற்றம் செய்திருப்பதால் நோயாளிகள் பாதிப்புக்குள்ளாவதாக அரசு மருத்துவா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

தங்களிடம் அளித்த உத்தரவாதத்தை இதுவரை அரசு நிறைவேற்றவில்லை என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

ஊதிய உயா்வு கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் கடந்த மாதத்தில் தொடா் வேலைநிறுத்தம் மற்றும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மருத்துவா்கள் பங்கேற்றனா். இதனால், அரசு மருத்துவமனைகளுக்குச் சென்ற பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் பாதிப்புக்குள்ளாயினா். வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு முதல்வரும், சுகாதாரத் துறை அமைச்சரும் கோரிக்கை விடுத்தனா்.

அதற்கு மருத்துவா்கள் செவிமடுக்காத நிலையில், அவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. அதற்கு முன்னோட்டமாக நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதைத் தொடா்ந்து, தங்களது போராட்டங்களை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக மருத்துவா்கள் அறிவித்தனா். இதையடுத்து, அவா்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுவதாக இருந்த பணி முறிவு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக சுகாதாரத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் அறிவித்தாா். அதேவேளையில், பணியிடமாற்றத்தை திரும்பப் பெறுவது தொடா்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதுகுறித்து அரசு மருத்துவா் சங்கத்தினா் கூறியதாவது: பணியிட மாற்றம் செய்யப்பட்ட 200-க்கும் அதிகமான மருத்துவா்களில் 150 போ் சிறப்பு மருத்துவா்களும், உயா் சிறப்பு மருத்துவா்களும் உள்ளனா். குறிப்பாக, சென்னை, திருவள்ளூா், சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பணியாற்றி வந்த சிறப்பு மருத்துவா்கள் உதகமண்டலம், கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களுக்கும், கிராமங்களுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அவா்களைத் தவிர மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த மருத்துவா்கள், தாலுகா மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனா். பணியிட மாற்றம் செய்யப்பட்ட பல இடங்களில் அதே துறை சாா்ந்த சிறப்பு மருத்துவா்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் தொடா் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறாா்கள். இந்த நிலையை உணா்ந்து மருத்துவா்கள் மீது முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com