மழைநீர் கட்டமைப்புகள் முறையாக பராமரிப்பு: சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 2.23 மீட்டர் வரை உயர்வு

குடிநீர் வாரியத்துடன் இணைந்து சென்னை மாநகராட்சி மேற்கொண்ட நடவடிக்கைகளால் கடந்த 2 மாதங்களில் நகரின் பல்வேறு பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக 2.23 மீட்டர் வரை உயர்ந்துள்ளது.
மழைநீர் கட்டமைப்புகள் முறையாக பராமரிப்பு: சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 2.23 மீட்டர் வரை உயர்வு

குடிநீர் வாரியத்துடன் இணைந்து சென்னை மாநகராட்சி மேற்கொண்ட நடவடிக்கைகளால் கடந்த 2 மாதங்களில் நகரின் பல்வேறு பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக 2.23 மீட்டர் வரை உயர்ந்துள்ளது.
 சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டு பெரும் வெள்ளம் சூழ்ந்தது. அப்போது சென்னை மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து 2016, 2017, 2018-ம் ஆண்டுகளில் சென்னை மாநகரம் தொடர்ந்து வறட்சியை சந்தித்தது. குறிப்பாக நிகழாண்டு சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் வறண்டு போனதால் சென்னை கடும் வறட்சியை எதிர்கொண்டது. ஏரிகள் வறண்ட நிலையில், நிலத்தடி நீர் ஓரளவு கைக்கொடுக்கும் என்று எதிர்பார்த்த சென்னை வாசிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நிலத்தடி நீரும் அதல பாதாளத்துக்கு சென்றது.
 இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் பலர் சென்னையை விட்டு காலி செய்து தண்ணீருக்காக புறநகர் பகுதிகளை நோக்கி படையெடுத்தனர். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் அவ்வப்போது மழை பெய்ததால் அண்ணாநகர் உள்ளிட்ட சில பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் சற்று உயர்ந்திருப்பதாக சென்னை குடிநீர் வாரியம் அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து வடகிழக்குப் பருவமழையை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை குடிநீர் வாரியம் மேற்கொண்டது.
 அதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சியும் குடிநீர் வாரியமும் இணைந்து அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். அதன் பலனாக, சென்னையில் கடந்த 2 மாதங்களில் பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக 2.23 மீட்டர் வரை அதிகரித்துள்ளது. அதன்படி, மாதவரத்தில் செப்டம்பரில் நிலத்தடி நீர்மட்டம் 6.30 மீட்டரில் இருந்த நிலையில், அக்டோபரில் 1.86 மீட்டராக உயர்ந்து 4.44 மீட்டர் அளவில் தண்ணீர் உள்ளது.
 அதேபோல, செப்டம்பர் மாதத்தில் அம்பத்தூரில் நிலத்தடி நீர்மட்டம் 7.49 ஆழத்தில் இருந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் 2.76 மீட்டர் அதிகரித்து 4.73 மீட்டரில் இருக்கிறது. கோடம்பாக்கத்தில் செப்டம்பர் மாதத்தில் நிலத்தடி நீர்மட்டம் 7.39 மீட்டரில் இருந்த நிலையில், 1.48 மீட்டர் அதிகரித்து அக்டோபரில் 5.91 மீட்டரிலேயே நீர் கிடைக்கிறது. இதனை தொடர்ந்து ஆலந்தூரில் நிலத்தடி நீர்மட்டம் செப்டம்பர் மாதத்தில் 7.60 மீட்டர் ஆழத்தில் இருந்த நிலையில், அக்டோபரில் 2.48 மீட்டர் உயர்ந்து 5.12 மீட்டராக அதிகரித்துள்ளது. அடையாறில் நிலத்தடி நீர்மட்டம் செப்டம்பர் மாதத்தில் 6.32 ஆழத்தில் இருந்தது. அதுவே அடுத்து வந்த அக்டோபரில் நிலத்தடி நீர்மட்டம் 1.57 மீட்டர் உயர்ந்து 4.75 மீட்டராக இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com