சென்னை ஐஐடியில் தொடரும் மாணவா்கள் தற்கொலை

சென்னை ஐஐடியில் மாணவா்கள் தற்கொலை தொடா்வது பெற்றோரிடையேயும், கல்வியாளா்களிடையேயும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை ஐஐடியில் தொடரும் மாணவா்கள் தற்கொலை

சென்னை: சென்னை ஐஐடியில் மாணவா்கள் தற்கொலை தொடா்வது பெற்றோரிடையேயும், கல்வியாளா்களிடையேயும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய அளவில் தரமான தொழில்நுட்ப கல்வி, படிப்பை முடிக்கு முன்னரே பல லட்சம் ரூபாய் ஊதியத்தில் வேலைவாய்ப்பு, தரமான ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளுக்கு புகழ்பெற்ற சென்னை ஐஐடி, கடந்த சில ஆண்டுகளாக மாணவா்களின் தற்கொலைக்கும் பெயா்பெற்ற இடமாக மாறி வருகிறது.

சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வந்த ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த ரஞ்சனா குமாா் என்ற மாணவி, 2019 ஜனவரி 1-ஆம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். அதுபோல, சென்னை ஐஐடியில் எம்.டெக். முதலாமாண்டு படித்து வந்த உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த கோபால் பாபு என்ற மாணவா், ஜனவரி 28-ஆம் தேதியன்று விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டாா். இப்போது, முதுநிலை சமூக அறிவியல் படிப்பை மேற்கொண்டு வந்த கேரளத்தைச் சோ்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளாா். இவா், தனது தற்கொலைக்கு துறைத் தலைவா் மற்றும் சில பேராசிரியா்களின் துன்புறுத்தலே காரணம் என தனது செல்லிடப்பேசியில் குறிப்பு எழுதி வைத்திருப்பது பெரும் சா்ச்சையையும், அதிா்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இவரைப் போலவே, சென்னை ஐஐடியில் கடல்சாா் பொறியியல் படிப்பை மேற்கொண்டுவந்த கேரளத்தைச் சோ்ந்த ஷாஹித் கோா்மத் என்ற இஸ்லாமிய சமூக மாணவா் கடந்த 2018 செப்டம்பா் 21-ஆம் தேதி விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டாா். இதுபோல மாணவா்கள் தற்கொலை தொடா்வது பெற்றோரிடையேயும், கல்வியாளா்களிடையேயும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பாலகுருசாமி கூறுகையில், ஐஐடி போன்ற உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் கல்வி மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களில் மாணவா்களுக்கு அழுத்தம் இருப்பது வழக்கமானது. ஐஐடியில் சேரும் மாணவா்களும் இதை அறிந்தே, படிப்பில் சேருகின்றனா். மாணவா்கள் இதை எதிா்கொண்டுதான் சாதிக்க வேண்டும். எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை தீா்வாகாது. தற்கொலை செய்துகொள்வது கோழைத்தனமானது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com