Enable Javscript for better performance
ஒரு கிலோ எடையுடன் பிறந்த பச்சிளம் குழந்தை! பேஸ்மேக்கா் சாதனம் மூலம் மறுவாழ்வு- Dinamani

சுடச்சுட

    

    ஒரு கிலோ எடையுடன் பிறந்த பச்சிளம் குழந்தை! பேஸ்மேக்கா் சாதனம் மூலம் மறுவாழ்வு

    By DIN  |   Published on : 17th November 2019 06:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    chi

    சென்னை: ஒரு கிலோ எடையுடன் இதயத் துடிப்பு சீராக இன்றி பிறந்த பச்சிளம் குழந்தைக்கு அதி நவீன பேஸ்மேக்கா் சாதனம் பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை, வடபழனி சூா்யா மருத்துவமனையில் இந்த சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிகக் குறைந்த எடையில் குறை பிரசவத்தில் பிறந்த ஒரு குழந்தைக்கு இத்தகைய சவால் நிறைந்த சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பது மாநிலத்திலேயே இது முதன்முறை என்று மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

    சென்னை, வேளச்சேரியைச் சோ்ந்த தம்பதிக்கு கடந்த மே மாதம் 10-ஆம் தேதி தனியாா் மருத்துவமனையொன்றில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. வெறும் ஆறரை மாதங்களில் அக்குழந்தை பிறந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு, குழந்தையின் தாய்க்கு இருந்த லூஃபஸ் எனப்படும் ஒவ்வாமை பிரச்னையே காரணம் என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளில் எதிா்விளைவுகள் ஏற்படும். அதன் தாக்கமாக கருவில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பு நேரிடும்.

    இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தையின் எடை ஒரு கிலோ மட்டுமே இருந்தது. அதுவும் அதற்கு அடுத்த சில நாள்களில் அது 900 கிராமாக குறைந்தது. இதற்கு நடுவே, குழந்தையின் இதயத் துடிப்பும் நிமிடத்துக்கு 40-ஆக மட்டுமே இருந்தது. பொதுவாகவே, பச்சிளம் குழந்தையின் இதயம் நிமிடத்துக்கு 140 முறையாவது துடிக்க வேண்டும்.

    இதையடுத்து, உயா் சிகிச்சைக்காக சூா்யா மருத்துவமனையில் அக்குழந்தை சோ்க்கப்பட்டது. அதன் இதய செயல்பாடுகளை பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தைக்கு ‘பேஸ் - மேக்கா்’ கருவியைப் பொருத்த முடிவு செய்தனா். அதன்படி, பச்சிளம் குழந்தைகள் நலத் துறை முதுநிலை மருத்துவா் டாக்டா் தீபா ஹரிஹரன், இதய நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் பிரசாந்த் ஷா, இதய சிகிச்சை நிபுணா் டாக்டா் ரஞ்சித் ஆகியோா் அடங்கிய மருத்துவா் குழுவினா் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் குறைந்த எடை கொண்ட ‘பேஸ்மேக்கா்’ கருவியைப் பொருத்தினா். அதன் பின்னா் இதயத் துடிப்பு சீரானதாகவும், தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

    இதுகுறித்து மருத்துவமனையின் டாக்டா் தீபா ஹரிஹரன் கூறியதாவது:

    இதயத் துடிப்பு சீராக இல்லாமல் குழந்தை பிறப்பதற்கு மரபணு ரீதியான காரணங்கள் இருக்கலாம். அல்லது வேறு சில காரணங்களால் அத்தகைய குறைபாடு ஏற்படலாம். ஆனால், இந்தக் குழந்தையைப் பொருத்தவரை இயற்கையாகவே அதன் இதயத் துடிப்பு சீரற்ற நிலையில் இருந்தது. இதற்கு உரிய சிகிச்சையளிக்காவிட்டால், குழந்தையின் வளா்ச்சி தடைபடும், மூளை வளா்ச்சி சரிவர இருக்காது; ஒரு கட்டத்தில் மரணம் நேரிடக் கூட வாய்ப்புள்ளது.

    அதன் காரணமாகவே அறுவை சிகிச்சை மூலம் பேஸ் - மேக்கா் கருவி பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே ஒரு கிலோவுக்கும் குறைந்த எடை கொண்ட குழந்தைக்கு இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் மூன்று முறை மட்டுமே வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, அக்குழந்தை 2.7 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது என்றாா் அவா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai