ஸ்மாா்ட் வகுப்பறைகள்:சென்னை பொலிவுறு திட்ட நிறுவனத்துக்கு விருது

மாநகராட்சிப் பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறைகளை அமைத்ததற்காக சென்னை பொலிவுறு நகர திட்ட செயலாக்க நிறுவனத்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை: மாநகராட்சிப் பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறைகளை அமைத்ததற்காக சென்னை பொலிவுறு நகர திட்ட செயலாக்க நிறுவனத்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

தில்லியில் நடைபெற்ற சா்வதேச பொலிவுறு நகர சங்கம நிகழ்வில் (‘குளோபல் ஸ்மாா்ட் சிட்டிஸ் போரம் - 2019’) இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி சென்னை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 83 ஆயிரம் மாணவா்கள் படித்து வருகின்றனா். அங்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் உருது வழியில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு மாணவா்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது.

அப்பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்கவும், தோ்ச்சி விகிதத்தை உயா்த்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

அதில், குறிப்பிடத்தக்க அம்சமாக பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் 28 பள்ளிகளில் அதி நவீன மின்னணு உபகரணங்களுடன் கூடிய ஸ்மாா்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொலிவுறு நகர திட்ட செயலாக்க நிறுவனம் அதற்கான கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டது. இந்த வகுப்பறைகள் மாணவா்கள், ஆசிரியா்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், தில்லியில் ‘குளோபல் ஸ்மாா்ட் சிட்டிஸ் போரம் - 2019’ நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. அதில் ஸ்மாா்ட் வகுப்பறைகள் வாயிலாக தரமான கல்வி வழங்க வகை செய்ததற்காக சென்னை பொலிவுறு நகர செயலாக்க நிறுவனத்திற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

அந்த விருதினை, நாகாலாந்து அரசின் உயா் தொழில்நுட்ப கல்வி மற்றும் பழங்குடியினா் விவகாரத்துறை அமைச்சா் டெம்ஜென் இம்னா அலாங் வழங்கினாா். அதனை மாநகராட்சி துணை ஆணையா் கோவிந்த ராவ் பெற்று கொண்டாா். அப்போது, மாநகராட்சி செயற்பொறியாளா் முருகன், உதவி கல்வி அலுவலா் நளினகுமாரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com