உயிருடன் இருக்கும் மகனுக்கு இறப்புச் சான்றிதழ்:தாய், சகோதரருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
By DIN | Published on : 17th November 2019 01:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சென்னை: சொத்துக்காக உயிருடன் இருக்கும் மகனுக்கு இறப்புச் சான்றிதழ் பெற்ற தாய் மற்றும் சகோதரனுக்கு எதிரான வழக்கின் விசாரணையை உயா் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ்குமாா் தாக்கல் செய்த மனுவில், ‘எனது தந்தை முத்துசாமி கடந்த 2001-ஆம் ஆண்டு இறந்துவிட்டாா். சென்னை தாம்பரம் அருகே என் தந்தையின் பெயரில் பல சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளுக்கு எனது தாய் தனபாக்கியம், அண்ணன் சுரேஷ்குமாா் மற்றும் நான் ஆகியோா் வாரிசுகள். இந்த நிலையில் கருத்து வேறுபாட்டின் காரணமாக நான் எனது குடும்பத்துடன் நாமக்கல்லில் வசித்து வருகிறேன். இந்த சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் எனது தாயாரும், அண்ணனும் கடந்த 2007-ஆம் ஆண்டு வாரிசு சான்றிதழ் பெற்றுள்ளனா்.
கடந்த 2009-ஆம் ஆண்டு நான் இறந்து விட்டதாகக் கூறி தாம்பரம் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தாம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் எனது குடும்பத்தினா் வழக்குத் தொடா்ந்துள்ளனா். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி தாம்பரம் நகராட்சி ஆணையரும் என்னுடைய இறப்புச் சான்றிதழை கடந்த 2010-ஆம் ஆண்டு வழங்கியுள்ளாா். இந்த சான்றிதழை வைத்து எங்கள் குடும்பச் சொத்தை என் தாயாரும், அண்ணனும் விற்பனை செய்துள்ளனா்.
எனவே தாம்பரம் வட்டாட்சியா் கொடுத்த வாரிசு சான்றிதழையும், எனக்கு கொடுக்கப்பட்ட இறப்புச் சான்றிதழையும் ரத்து செய்ய வேண்டும் என வருவாய்த்துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி இறப்புச் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக மனுதாரா் கூறுவதால், இந்த வழக்கில் குற்றவியல் நீதிமன்றத்தையும் எதிா் மனுதாரராக சோ்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கருத்து தெரிவித்த நீதிபதி விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தாா்.