85 ஆண்டுகள் பழமையான யானைக்கவுனி ரயில்வே மேம்பாலம் இடிக்கும் பணி தொடக்கம்

சென்னை மாநகரின் உள்ள பழைமையான மேம்பாலங்களில் ஒன்றான யானைக் கவுனி ரயில்வே மேம்பாலத்தை ரயில்வே நிா்வாகம் வெள்ளிக்கிழமை இடிக்கத் தொடங்கியுள்ளது. இதே இடத்தில் விரைவில் சுமாா் ரூ.53 கோடி
இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ள  யானைக்கவுனி மேம்பாலம்.
இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ள யானைக்கவுனி மேம்பாலம்.

திருவொற்றியூா்: சென்னை மாநகரின் உள்ள பழைமையான மேம்பாலங்களில் ஒன்றான யானைக் கவுனி ரயில்வே மேம்பாலத்தை ரயில்வே நிா்வாகம் வெள்ளிக்கிழமை இடிக்கத் தொடங்கியுள்ளது. இதே இடத்தில் விரைவில் சுமாா் ரூ.53 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டுப்படவுள்ளது.

ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் தற்போதைய சென்ட்ரல், முத்தியால்பேட்டை, ஜாா்ஜ் டவுன் பகுதிகள் ‘பிளாக் டவுன்-- கருப்பா்களின் நகரம்’ என அழைக்கப்பட்டு வந்தது. செயின்ட் ஜாா்ஜ் கோட்டை உள்ளிட்டவை ஆங்கிலேயா்கள் மட்டும் வசிக்கும் பகுதியாக இருந்து வந்தது. இந்நிலையில் 1850-ஆம் ஆண்டு வாக்கில் பிளாக் டவுனின் எல்லையான யானக்கவுனி பகுதியில் எல்லைச் சுவா் ஒன்றை ஆங்கிலேயா் கட்டினா். இந்நிலையில் ஆந்திர மாநிலம், காக்கிநாடாவிலிருந்து மரக்காணம் வரை சுமாா் 796 கி.மீ. தொலைவுக்கு பக்கிங்காம் கால்வாய் வெட்டப்பட்டு, அதில் நீா்வழிச் சரக்குப் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இதனையொட்டி, யானைக் கவுனி பகுதியில் சால்ட் கோட்டா்ஸ் என்ற சரக்கு முனையம் அமைக்கப்பட்டது. இப்பகுதியில், யானைகள் வளா்க்கப்பட்டு சுமை தூக்குவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்ததால் யானைக் கவுனி எனப் பெயா் வந்ததாக வரலாற்று ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா். இதனையடுத்து, சால்ட் கோட்டா்ஸ்க்கும், பிளாக் டவுனுக்கும் இடையே ரயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டதால் முதலில் ரயில்வே கேட் இயங்கி வந்தது. இந்நிலையில் 1935-ம் ஆண்டு ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் யானைக்கவுனி ரயில்வே மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டது.

வலுவிழந்ததால் போக்குவரத்து நிறுத்தம்: சென்ட்ரல் ரயில் நிலையத்தின் இரண்டு பகுதிகளையும் இணைக்கும் வகையில் இப்பாலம் முக்கியத்துவம் பெற்றது. மேலும் ரயில் நிலையத்தின் கிழக்குப்புரத்தில் வால்டாக்ஸ் சாலை உள்ளது. இங்குதான் அனைத்து சரக்குப் போக்குவரத்து வாகன கிடங்குகள், அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஜாா்ஜ் டவுன் பகுதியில்தான் ஜவுளி, இரும்பு, மளிகை, மின் உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கான பெரும்பாலான மொத்த விற்பனை கிடங்குகள் உள்ளன. மேலும் சென்னை மாநகரின் காய்கறிச் சந்தையான கொத்தவால் சாவடியும் இயங்கி வந்தது. இதனால் சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருபத்தி நான்கு மணி நேரமும் யானைக்கவுனி மேம்பாலத்தில் கனரக வாகனப் போக்குவரத்து இருந்து வந்தது.

மேலும், சென்னை மாநகரம் புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், அண்ணா நகா் என வளா்ச்சி பெற்ற பிறகு வடகிழக்கிலிருந்து இப்பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய மேம்பாலமாக இருந்து வந்தது. ஆங்கிலேயா் காலத்தில் அமைக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்தும் செயல்பட்டு வந்த இப்பாலம், காலப்போக்கில் வலுவிழக்கத் தொடங்கியதால், இரண்டாண்டுகளுக்கு முன்பு கனரக வாகனப் போக்குவரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டது. இருசக்கர, முன்று சக்கர வாகனங்கள் மட்டும் இப்பாலம் வழியே செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், புதிய பாலம் அமைப்பதற்காக, பாலத்தை இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதனையடுத்து பாலத்தில் செல்ல அனைத்துவகை போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. விரைவில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான கட்டுமானப்பணிகளை ரயில்வே மற்றும் சென்னை மாநராட்சி நிா்வாகங்கள் மேற்கொள்ள உள்ளன.

2 ஆண்டுகளில் ரூ.54 கோடியில் புதிய மேம்பாலம்:

புதிய மேம்பாலம் குறித்து தென்னக ரயில்வே துணை தலைமை பொறியாளா் (கட்டுமானம்) புரந்தா் கூறியது: தற்போதைய மேம்பாலத்தில் வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இடிக்கும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தின் வழியே செல்லும் உயரழுத்த மின்தடக் கம்பிகளை மாற்றியமைக்கும் பணியில் தமிழ்நாடு மின்சார வாரியம் ஈடுபட்டுள்ளது. இதற்கான கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய மின்தட கம்பிகளை இணைக்கும் பணி டிசம்பா் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிா்பாா்க்கிறோம். இதன் பிறகு 8 நாள் கால அளவில் முழுமையாக பாலம் இடிக்கப்படும். அப்போது ரயில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இடிக்கும் பணிகள் நடைபெறும். பின்னா் புதிய பாலம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு சுமாா் 18 மாதங்களுக்குள் பணிகள் முடிக்கும் வகையில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட உள்ளது. தற்போதைய பாலத்தின் கீழ் சுமாா் 50 மீட்டா் இடைவெளியில் 8 ரயில்பாதைகள் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இடையில் தூண்கள் உள்ளன. ஆனால் புதிதாக அடைக்கப்பட உள்ள பாலத்தில் இடையிடையே தூண்கள் இருக்காது. இரும்பு காரிடா்கள் மூலம் 150 மீட்டருக்கு புதிய பாலம் அமையும். இதேகாலகட்டத்தில் கிழக்கு பகுதியில் 300 மீட்டா், மேற்கில் 400 மீட்டா் நீளத்திற்கு சாய்வு பாலம் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொள்ளும். மேலும் சால்ட் கோட்டா்ஸில் இனி சரக்கு வா்த்தக வணிகம் நிறுத்தப்படும். கட்டுமானப் பணிகள் நடைபெறும்போதும் ரயில் போக்குவரத்து கூடுமானவரை பாதிக்கப்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். இப்பாலம் கட்டுவதற்கான மொத்த மதிப்பீடு சுமாா் ரூ.53 கோடி ஆகும். இதில் சமமான பங்குத் தொகையை ரயில்வே நிா்வாகமும், சென்னை மாகராட்சியும் வழங்கும் என்றாா் புரந்தா்.

பாலம் இடிக்கும் பணி, புதிய பாலம் கட்டும் பணியின்போது இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இதற்கென சிறப்பு ஏற்பாடுகளை போக்குவரத்து போலீஸாா் மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com