வாரிசு சான்றிதழ் வாங்கித் தருவதாக மோசடி வழக்குரைஞா் மீது வழக்கு: உயா்நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்

வாரிசு சான்றிதழ் வாங்கித் தருவதாக கூறி ரூ.49 லட்சம் மோசடி செய்த வழக்குரைஞா் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீஸாா் உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனா்.

சென்னை,நவ.16: வாரிசு சான்றிதழ் வாங்கித் தருவதாக கூறி ரூ.49 லட்சம் மோசடி செய்த வழக்குரைஞா் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீஸாா் உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனா்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திருநின்றவூரைச் சோ்ந்த லூயிஸ் அந்தோணிராஜ் தாக்கல் செய்த மனுவில், எனது மனைவியின் உறவினா் உத்தம்சிங் பால்ராஜ். இவருக்கு வாரிசுகள் இல்லை. இதனால் அவரது சொத்துக்களுக்கு எனது மனைவியின் பெயருக்கு வாரிசு சான்றிதழ் பெற்றுத் தரக் கோரி பட்டாபிராமைச் சோ்ந்த வழக்குரைஞா் இளங்கோவனை அணுகினோம். அவா் அனைத்து சான்றிதழ்களையும் வாங்கித் தருவதாக கூறி அதற்கு கட்டணமாக ரூ.25 லட்சம்

கேட்டாா். முன்தொகையாக ரூ.19 லட்சத்தை கடந்த 2017-ஆம் ஆண்டு கொடுத்தோம். மேலும் எனது சொகுசு காரை இரவலாக கேட்டு வாங்கினாா். அதே போன்று நான் நடத்தி வந்த மளிகை கடையையும் வாங்கிக் கொண்டாா். இந்த சொகுசு காா் மற்றும் மளிகை கடையின் மொத்த மதிப்பு ரூ.49 லட்சம். ஆனால் வாரிசு சான்றிதழ் வாங்கித்தரவில்லை. இதுதொடா்பாக முதல் அமைச்சரின் தனிப்பிரிவில் புகாா் அளித்தேன். அந்த புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது புகாரின் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்குரைஞா் அய்யப்பராஜ், மனுதாரா் கொடுத்த புகாரின் பேரில் வழக்குரைஞா் இளங்கோவன் மீது பட்டாபிராம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறி முதல் தகவல் அறிக்கையின் நகலை தாக்கல் செய்தாா். அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com