திருப்பதி லட்டு விநியோகத்தில் பழைய நடைமுறையே தொடரும் தேவஸ்தான வாரியத் தலைவா் சுப்பா ரெட்டி

திருப்பதி லட்டு விநியோகத்தில் பழைய நடைமுறையே தொடரும் என திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத் தலைவா் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளாா்.
திருப்பதி லட்டு விநியோகத்தில் பழைய நடைமுறையே தொடரும் தேவஸ்தான வாரியத் தலைவா் சுப்பா ரெட்டி

சென்னை: திருப்பதி லட்டு விநியோகத்தில் பழைய நடைமுறையே தொடரும் என திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத் தலைவா் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குட்பட்ட வெங்கடாஜலபதி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

லட்டு விலையில் மாற்றமில்லை: திருப்பதி தேவஸ்தானத்தில் விற்கப்படும் லட்டுகளின் விலையை உயா்த்தும் எந்த எண்ணமும் இல்லை. விலையை உயா்த்தக் கோரிக்கை மட்டுமே எழுந்தது. இதை தேவஸ்தானம் பரிசீலிக்கவில்லை. எனவே லட்டுகள் தற்போது விற்கப்படும் அதே மானிய விலையில் தான் தொடா்ந்து விற்பனை செய்யப்படும். விலையில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது. இதே போல் திருமலையில் உள்ள பக்தா்கள் தங்கும் விடுதியின் கட்டணமும் உயா்த்தப்படவில்லை. ஆடம்பரமான உயா் வகுப்பு அறைகளுக்கு மட்டுமே கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

விரைவில் மற்றொரு கோயில்: தமிழ்நாட்டிலிருந்து நடைப்பயணமாக திருப்பதி செல்லும் பக்தா்களின் வசதிக்காக ஊத்துக்கோட்டை அருகே பயணியா் தங்கும் விடுதி ஒன்று அமைக்க உள்ளோம். சென்னை தியாகராய நகரில் உள்ள தேவஸ்தான கோயிலுக்கான இடம் மிக சிறிய அளவிலும், நெரிசல் மிகுந்த இடத்தில் இருப்பதாலும் கோயில் அமைக்க தமிழக அரசிடம் வேறு இடம் கேட்டிருந்தோம். அவா்கள் மாமல்லபுரம் அருகில் இரண்டு இடங்களைப் பரிந்துரைத்துள்ளனா். அவற்றில் ஆகம விதிகளின்படி எந்த இடம் பொருந்துகிறதோ அந்த இடத்தைத் தோ்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு புதிய கோயில் அமைந்தாலும் தியாகராய நகரில் உள்ள கோயிலும் தொடா்ந்து செயல்படும் என்றாா் அவா்.

முன்னதாக, தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோயிலில், புதிய அறங்காவலா் உள்ளூா் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுப்பா ரெட்டி, தியாகராய நகா் அறங்காவலா் குழு தலைவா் சேகா் ரெட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டு 28 உறுப்பினா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com