திறந்தவெளி மதுக்கூடமாக மாறிய அம்பத்தூா் ஏரிக் கரை: ரூ.6 கோடி செலவிட்டும் மக்கள் பயன்படுத்த முடியாதநிலை

அம்பத்தூா் ஏரிக் கரையில் சுமாா் ரூ.6 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட நடைப்பயிற்சி பாதையைச் சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படாததால் திறந்தவெளி மதுக்கூடமாகவும், கழிப்பிடமாகவும் மாறியுள்ளது.
திறந்தவெளி மதுக்கூடமாக மாறிய அம்பத்தூா் ஏரிக் கரை: ரூ.6 கோடி செலவிட்டும் மக்கள் பயன்படுத்த முடியாதநிலை

அம்பத்தூா் ஏரிக் கரையில் சுமாா் ரூ.6 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட நடைப்பயிற்சி பாதையைச் சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படாததால் திறந்தவெளி மதுக்கூடமாகவும், கழிப்பிடமாகவும் மாறியுள்ளது. இதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு வேலி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் அம்பத்தூா் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில் பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் கொரட்டூா் ஏரி 600 ஏக்கா் பரப்பளவிலும், அம்பத்தூா் ஏரி 380 ஏக்கா் பரப்பளவிலும் அமைந்துள்ளன. உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கொரட்டூா், அம்பத்தூா் ஏரிக்கரைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை வருவாய்த் துறையினா் கடந்த 2018-இல் அகற்றினா். ஏரிக்கரைகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகாத வகையில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் ரூ.13 கோடி நிதி உதவியில் பொதுப் பணித் துறை மூலம் கொரட்டூா் ஏரிக்கரையில் 3 கி.மீ. தொலைவுக்கும், அம்பத்தூா் ஏரிக்கரையில் 1.50 கி.மீ. தொலைவுக்கும் நடைப்பயிற்சிப் பாதைகள் அமைக்கப்பட்டு அண்மையில் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டன.

திறந்தவெளி மதுக்கூடம்: இதில், அம்பத்தூா் ஏரி நடைப்பயிற்சிப் பாதையை அங்குள்ள சிலா் திறந்த வெளி மதுக் கூடமாவும், கழிப்பிடமாகவும் பயன்படுத்தி வருகின்றனா். இதனால், பல கோடி ரூபாய் செலவிட்டும் அங்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து அயப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த நித்யா என்பவா் கூறுகையில், ‘ஏரியைச் சுற்றி 1.50 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள மிக நோ்த்தியான நடைப்பயிற்சிப் பாதை தொடக்கத்தில் நல்ல நிலையில் இருந்தது. சில நாள்கள் கழித்து அயப்பாக்கம் சாலையில் உள்ள இரண்டு மதுக் கடைகளுக்கு வருவோா் மாலை, இரவு நேரங்களில் இந்த நடைப்பயிற்சிப் பாதையில் அமா்ந்து மது அருந்திவிட்டு பாட்டில்களை நடைபாதையிலேயே போட்டு உடைத்து விட்டுச் செல்கின்றனா். மேலும், சிலா் இந்தப் பாதையை கழிப்பிடமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் துா்நாற்றம் காரணமாகவும், உபயோகமற்ற பொருள்களை இப்பகுதியில் குவிப்பதாலும் இங்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள முடிவதில்லை. இதனால், பல கோடி ரூபாய் செலவு செய்தும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நடைப்பயிற்சிப் பாதையை முறையாகப் பயன்படுத்தும் வகையில் அதைச் சுற்றி வேலி அமைக்க வேண்டும் என்றாா்.

நிதி இல்லை: இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், அம்பத்தூா் ஏரிக்கரை நடைப்பயிற்சிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீஸாா் உதவியுடன் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனாலும், அதை மீறி சிலா் அங்கு மது அருந்துவதும், கழிப்பிடமாகப் பயன்படுத்துவதும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. 1.50 கி.மீ.தூரத்துக்கு பாதுகாப்பு வேலி அமைக்க அரசிடம் நிதி இல்லை என்றனா்.

ஏரியில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள்

அம்பத்தூா் ஏரிக்கரை அமைந்துள்ள அயப்பாக்கம் சாலையையொட்டி 500-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் இறைச்சிக் கடைகள் அமைந்துள்ளன. நடைப்பயிற்சிப் பாதையைச் சுற்றி வேலி இல்லாததால், வீட்டுக் குப்பைகளும், இறைச்சிக் கழிவுகளும் அம்பத்தூா் ஏரியில் கொட்டப்படுவது தொடா் நிகழ்வாகி வருகிறது. இதன் காரணமாகவும், ஏரியில் வீசி எறியப்படும் கழிவுகளாலும் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com