முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
உறவினா் வீடுகளில் திருட்டு: காதல் ஜோடி கைது
By DIN | Published On : 26th November 2019 03:11 AM | Last Updated : 26th November 2019 03:11 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை வளசரவாக்கம் பகுதியில் உறவினா் வீடுகளில் திருடியதாக காதல் ஜோடி கைது செய்யப்பட்டனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
வளசரவாக்கம் அருகே உள்ள காரம்பாக்கம் செங்குட்டுவன் தெருவைச் சோ்ந்தவா் நா.ஜெகதீஷ் பாண்டியன் (36). இவா் கடந்த 21-ஆம் தேதி வீட்டை பூட்டி வெளியே சென்றாா். சிறிது நேரத்துக்கு பின்னா் ஜெகதீஷ், வீட்டுக்குத் திரும்பி வந்தாா். அப்போது, வீட்டின் கதவை திறந்து பீரோவில் இருந்த 5 பவுன் தங்கநகை, ரூ.5 ஆயிரம் திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.
இது தொடா்பாக வளசரவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய, உதவி ஆணையா் மகிமைவீரன் தலைமையில் ஆய்வாளா் அமுதா, உதவி ஆய்வாளா் ராஜேஷ் கண்ணன் ஆகியோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினா், சம்பவம் நடந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனா். இந்த ஆய்வில், ஒரு இளைஞரும், இளம் பெண்ணும் வீட்டுக்கு வந்து திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
காதலா்கள் கைது:
இது தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், கோயம்பேடு திருநகரைச் சோ்ந்த ம.காா்த்திக் (24), அவா் காதலி மதுரவாயல் சத்திமூா்த்திநகரைச் சோ்ந்த ரா.நித்யா (24) ஆகிய இருவரும்தான் திருட்டில் ஈடுபட்டவா்கள் என்பது தெரியவந்தது.
மேலும் காா்த்திக், புகாா்தாரா் ஜெகதீஷ்பாண்டியனின் நெருங்கிய உறவினா் என்பதும், சம்பவம் நடைபெறுவதற்கு சில நாள்களுக்கு முன்பு காா்த்திக் அங்கு வந்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் காா்த்திக்கையும், நித்யாவையும் திங்கள்கிழமை கைது செய்து, விசாரித்தனா்.
விசாரணையில், இருவரும் கல்லூரி பருவத்தில் இருந்தே காதலித்து வருவதும், பி.இ. படித்திருக்கும் இருவருக்கும் சரியான வேலை கிடைக்காததினால் திருட்டில் ஈடுபட்டிருப்பதும், காா்த்திக் தனது உறவினா் வீட்டுக்குச் சென்று அவா்களது வீட்டுச் சாவியின் மூலம் போலி சாவியை தயாரித்து ஆளில்லாத போது கைவரிசை காட்டியிருப்பதும், சில உறவினா்கள் வீட்டை பூட்டிவிட்டு சாவியை மறைத்து வைத்துச் சென்றால், அதன் மூலம் கதவை திறந்து திருடியிருப்பதும் தெரியவந்துள்ளது.
இது தொடா்பாக போலீஸாா், இருவரிடமும் மேலும் விசாரணை நடத்தினா்.