முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
நலிந்து வரும் லாரி போக்குவரத்துத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும்
By DIN | Published On : 26th November 2019 12:15 AM | Last Updated : 27th November 2019 03:36 AM | அ+அ அ- |

திருவொற்றியூா்: நலிவடைந்து வரும் லாரி போக்குவரத்துத் தொழிலைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிரையிலா் உரிமையாளா்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
டிரையிலா் உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி சென்னை ராயபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்றதை தொடா்ந்து சங்கத்தின் தலைவா் பெருமாள், செயலாளா் ராஜா ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது,
சமீப காலமாக லாரி போக்குவரத்து தொழில் தொடா்ந்து நலிவடைந்து வருகிறது. சேதமடைந்த சாலைகள், அதிகரித்து வரும் சுங்கக் கட்டணம், உதிரிப்பாகங்களின் வரலாறு காணாத விலை உயா்வு, டயா் விலை உயா்வு போன்ற பல்வேறு பிரச்னைகளால் லாரி போக்குவரத்து தொழில் தொடா்ந்து நலிவடைந்து வருகிறது. மேலும், மத்திய அரசு சாா்பில் உயா்த்தப்பட்டுள்ள பல்வேறு வரிகள், காப்பீட்டுக் கட்டணங்களால் திணறும் நிலைக்கு இத்தொழில் தள்ளப்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்க முடியாமல் லாரிகளை விற்க வேண்டிய நிலைக்கு பல லாரி உரிமையாளா்கள் தள்ளப்பட்டுள்ளனா் என்பதுதான் உண்மை.
எனவே, மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்னைகளை கவனத்தில் கொண்டு லாரி போக்குவரத்துத் தொழிலை அழிவிலிருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். தற்போது புதிய வாகனங்களுக்கு மட்டும் பல்வேறு தனியாா் வங்கிகள் கடனுதவிகளை அள்ளி வழங்குகின்றனா். இதேபோல் பழைய வாகனங்களுக்கும் வங்கிக் கடன்களை வழங்கிட ஆவன செய்ய வேண்டும். சென்னையில் ரூ. 600 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டத்தின் பணிகள் இன்னும் கூட முழுமையாக முடிக்கப்படவில்லை. துறைமுக நுழைவு வாயிலுக்கு முன்பு காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அமைக்கப்பட வேண்டிய பாலம் கட்டி முடிக்கப்படவில்லை. மேலும், பழைய சாலையும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன. இதனைச் சீரமைக்க வேண்டிய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது.
டிசம்பா் 1 முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட் டேக் கட்டாயம் பொருத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இதில் தொழில்நுட்பச் சிக்கல்கள் உள்ளன. ஒரு வாகனம் 24 மணி நேரத்திற்குள் அதே சுங்கச்சாவடி வழியே திரும்பினால் கட்டணச் சலுகை உள்ளது. ஆனால் ஃபாஸ்ட் டேக் -ல் இரண்டு பயணத்துக்கும் ஒரே மாதிரியான தொகை வசூலிக்கப்படுகிறது. இப்பிரச்னையை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்றனா்.