முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
கொள்ளையர்களுடன் போராடிய இளைஞர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு
By DIN | Published On : 07th October 2019 04:09 AM | Last Updated : 07th October 2019 04:09 AM | அ+அ அ- |

ஓடும் ரயிலில் கொள்ளைக் கும்பலிடம் இருந்து செல்லிடப்பேசியைப் பாதுகாக்க போராடிய நபர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் சாந்தினி பாஷா (26), இவர் வெளிநாட்டுக்கு ஆள்களை அனுப்பும் ஒரு நிறுவனம் மூலமாக வெளிநாட்டுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். அதற்காக மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை வந்தார். பரிசோதனை முடிந்ததும் நண்பர்கள், உறவினர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை சென்ட்ரலில் இருந்து தில்லி செல்லும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயிலில் புறப்பட்டார். இந்த ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் ரயில் படிக்கட்டில் அமர்ந்து இருந்தார். இந்த ரயில் எண்ணூர் ரயில் நிலையத்துக்கும் அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்துக்கும் இடையில் மெதுவாக சென்று கொண்டிருந்தபோது, பாஷாவின் செல்லிடப்பேசியை ஒரு கும்பல் பறிக்க முயற்சித்தது. அவர்களிடம் இருந்து செல்லிடப்பேசியைப் பாதுகாக்க பாஷா போராடினர். இந்தப் போராட்டம் தோல்வியடைந்து,
பாஷா ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து, சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் உயிரிந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பாஷாவின் உறவினர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். சில கிலோ மீட்டர் தூரம் தாண்டிய பிறகு, ரயில் நின்றது. இதனால், நடுவழியில் இறங்க முடியாமல் கூடூர் ரயில் நிலையத்தில் இறங்கி எண்ணூருக்கு விரைந்து வந்தனர். இதற்கிடையில், அந்த கும்பல் பாஷாவின் செல்லிடப்பேசியையை எடுத்துக்கொண்டு தப்பியது.
இது குறித்து கொருக்குபேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், கொருக்குபேட்டை ரயில்வே போலீலார் சம்பவ இடத்துக்கு விரைந்து, பாஷாவின் உடலை பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இது குறித்து கொருக்குப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கினர். பறிபோன பாஷாவின் செல்லிடப்பேசி எண்ணை வைத்து கொள்ளையர்கள் இருப்பிடத்தை அறிந்தனர். அங்கு விரைந்து சென்று, எண்ணூரைச் சேர்ந்த நாகராஜ் (22), முகேஷ் (18), பிரகாஷ் (24) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரை ரயில்வே போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பிடிபட்ட நபர்களில் நாகராஜ் மீது ஏற்கெனவே இதுபோல 6 வழக்குகள் உள்ளன. பிடிப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகராஜ், முகேஷ், பிரகாஷ் ஆகியோர் புழல் சிறையில் அடைத்தனர். 16 வயது சிறுவனை கெல்லீஸில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.