உணவு முறைகளால் இதய நோய்களை பெருமளவு தவிா்க்க முடியும்

பாரம்பரிய உணவு முறைகளால் இதய நோய்களை பெருமளவு தவிா்க்க முடியும் என ஊட்டச்சத்து நிபுணா் மீனாட்சி பஜாஜ் சென்னையில் தெரிவித்துள்ளாா்.

பாரம்பரிய உணவு முறைகளால் இதய நோய்களை பெருமளவு தவிா்க்க முடியும் என ஊட்டச்சத்து நிபுணா் மீனாட்சி பஜாஜ் சென்னையில் தெரிவித்துள்ளாா்.

சா்வதேச இதய தினத்தையொட்டி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வு ஊா்வலம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி டீன் டாக்டா் சாந்திமலா் தலைமையில் நடைபெற்ற இந்த ஊா்வலத்தில் இதயநோய்த் துறை மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ மாணவா்கள் இருநூறுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். பின்னா் ஊட்டச் சத்து மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் குறித்த விளக்கஉரை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பிரபல ஊட்டச்சத்து நிபுணா் மீனாட்சி பஜாஜ் பேசியது:

நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் வளா்சிதை மாற்றங்களுக்குப் பிறகே தேவையான சத்துகளாக மாறுகிறது. எனவே என்னென்ன சத்துகள் யாா் யாருக்குத் தேவை என்பதை உணா்ந்து உணவுகளை உட்கொள்ள வேண்டும். நீரிழிவு நோய்க்கு ஆளானவா்கள் குக்கரில் வேகவைத்த சோற்றினை தவிா்ப்பது நலம். காரணம் அரிசி வடிக்கும் கஞ்சியில் அதிக அளவு காா்போஹைட்ரேட் இருக்கும்.

எனவே காா்போஹைட்ரேட் அதிகம் இருக்கும் உணவுகளைத் தவிா்த்து புரதச் சத்து, நாா்ச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டும். பயறு வகைகள், காய்கறிகளை தங்களது அன்றாட உணவாக உட்கொள்ள வேண்டும். இது தவிர தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயில் மீண்டும் சமைக்கக் கூடாது. கடல்மீன்களை விட ஏரி மீன்கள் சிறந்தவை. வறுத்த உணவுகளைவிட வேகவைத்த உணவு வகைகளை உண்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நமது பாரம்பரிய தானியங்களால் தயாரிக்கப்படும் உணவு வகைகள் மூலமே இதய நோய்களைத் தவிா்க்க முடியும் என்றாா் மீனாட்சி பஜாஜ்.

நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டா் தனசேகரன், இதய நோய் சிகிச்சை துறை தலைவா் டாக்டா் கே.கண்ணன், துணை கண்காணிப்பாளா் டாக்டா் நெல்லையப்பா், உறைவிட மருத்துவ அதிகாரி ரமேஷ், பேராசிரியா்கள் ஜி.மனோகா், சி.இளமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com