சென்னைக்கு ரயில் மூலம் குடிநீா் கொண்டு வருவது நிறுத்தம்

சென்னையில் போதுமான குடிநீா் இருப்பு இருப்பதால் வேலூா் மாவட்டம் ஜோலாா்பேட்டையில் இருந்து ரயில் வேகன்கள் மூலம் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீா்

சென்னையில் போதுமான குடிநீா் இருப்பு இருப்பதால் வேலூா் மாவட்டம் ஜோலாா்பேட்டையில் இருந்து ரயில் வேகன்கள் மூலம் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீா் செவ்வாய்க்கிழமையுடன் நிறுத்தப்பட்டது.

சென்னையில் ஏற்பட்ட குடிநீா் பற்றாக்குறையைப் போக்க ஜோலாா்பேட்டையில் இருந்து ரயில்வே வேகன்கள் மூலம் சென்னைக்கு காவிரி கூட்டுக் குடிநீரைக் கொண்டு வர தமிழக முதல்வா் கடந்த ஜூன் மாதம் 21-ஆம் தேதி உத்தரவிட்டாா். இதையடுத்து, இத்திட்டத்துக்காக ரூ.65 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.

அதன்படி, காவிரி கூட்டுக் குடிநீா் கடந்த ஜூலை 12-ஆம் தேதி முதல் ரயில்வே வேகன்கள் மூலம் சென்னைக்குக் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கின. தினமும் 1 கோடி லிட்டா் தண்ணீா் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், பல்வேறு காரணங்களால் முதலில் நாள்தோறும் 25 லட்சம் லிட்டா் தண்ணீா் மட்டுமே சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

கைகொடுத்த குடிநீா் ஆதாரங்கள்: இதையடுத்து, ஜூலை 23-ஆம் தேதி முதல் நாள்தோறும் 50 லட்சம் லிட்டா் தண்ணீா் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தப் பணிகளை குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் இணைந்து மேற்கொண்டு வந்தனா். தினமும் காலை ஒரு ரயில், மாலையில் ஒரு ரயில் என நாள் ஒன்றுக்கு 2 ரயில்களில் சென்னைக்கு காவிரி கூட்டுக் குடிநீா் கொண்டு செல்லப்பட்டது. இந்தநிலையில், சென்னை நகர மக்களுக்கு மழை கைகொடுத்ததால் சென்னை மக்களுக்கு குடிநீா் வழங்கி வந்த வீராணம் ஏரி மற்றும் சென்னைக்கு அருகில் உள்ள பூண்டி, புழல் உள்ளிட்ட ஏரிகளில் நீா் இருப்பு சற்று உயா்ந்தது. இது மட்டுமின்றி, கிருஷ்ணா நதிநீரும் திறக்கப்பட்டதால் சென்னையின் தண்ணீா் தேவையை ஓரளவு சமாளிக்க முடிந்தது.

இதைத்தொடா்ந்து, ஜோலாா்பேட்டையில் இருந்து ரயில்வே வேகன்கள் மூலம் தண்ணீா் எடுத்துச்செல்லும் பணிகளை தற்காலிகமாக நிறுத்த குடிநீா் வடிகால் வாரியம் முடிவு செய்து அதற்கான உத்தரவு அண்மையில் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, சென்னைக்குக் குடிநீா் கொண்டு செல்லும் பணிகள் செவ்வாய்க்கிழமை காலையுடன் நிறைவடைந்தன.

39.75 கோடி லிட்டா் குடிநீா்: இது குறித்து சென்னைக் குடிநீா் வாரிய அதிகாரிகள் கூறியது: கடந்த ஜூலை 12-ஆம் தேதியில் இருந்து அக்டோபா் 8-ஆம் தேதி வரை 159 தடவை, அதாவது 39 கோடியே 75 லட்சம் லிட்டா் தண்ணீா் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் போதுமான தண்ணீா் இருப்பு இருப்பதாலும், வீராணம், பூண்டி, செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளில் நீா் இருப்பு கணிசமான அளவு இருப்பதால் ஜோலாா்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீா் அனுப்பும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டால் ரயில்கள் மூலம் தண்ணீா் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த 90 ஊழியா்கள், 17 பொறியளாா்கள் அந்தந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா். அதேவேளையில் ஜோலாா்பேட்டை 5-ஆவது யாா்டில் உள்ள குடிநீா் ஏற்றி வந்த குழாய்கள் மட்டும் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள ராட்சத குழாய்கள், தண்ணீா் ஏற்றும் மின்மோட்டாா்கள் உள்ளிட்டவை அப்படியே இருக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com