புறநகர்ப் பகுதிகளில் அனுமதி பெறாமல் அதிகரித்து வரும் மழலையர் பள்ளிகள்: அரசு கண்காணிக்குமா?

சென்னை புறநகர்ப் பகுதிகளில் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் மழலையர் பள்ளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
புறநகர்ப் பகுதிகளில் அனுமதி பெறாமல் அதிகரித்து வரும் மழலையர் பள்ளிகள்: அரசு கண்காணிக்குமா?


சென்னை புறநகர்ப் பகுதிகளில் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் மழலையர் பள்ளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இவற்றை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பில் உள்ள மாவட்டக் கல்வி நிர்வாகம் பணிச்சுமை காரணமாக போதிய கவனம் செலுத்தாமல் இருந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
விஜயதசமியை முன்னிட்டு ஆண்டுதோறும் கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் சிறு குழந்தைகளுக்கான மழலையர் பள்ளிகள் புதிதாக நூற்றுக்கணக்கில் தொடங்கப்படுகின்றன. மழலையர் பள்ளிகள் நடத்த அரசு விதித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் இந்த பள்ளிகள் கடைப்பிடித்து நடத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளிலும், சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர் ஆகிய பேரூராட்சிகளிலும், பொழிச்சலூர், முடிச்சூர், மண்ணிவாக்கம், ஓட்டேரி ஆகிய ஊராட்சிகளிலும் 200-க்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
நடுத்தர, உயர்நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த மழலையர் பள்ளிகளின் தேவை அதிகரித்துள்ளது.
ப்ளே ஸ்கூல், ப்ரி ஸ்கூல், பிரைமரி, டே கேர்,கிண்டர்கார்டன் கிரீச் என்று பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வரும் இந்த இளம் தளிர் குழந்தைகளுக்கான மழலையர் பள்ளிகளில் அரசு விதித்துள்ள விதிமுறைகள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.
மழலையர் பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, சுகாதாரமான கழிப்பறைகள், அவசர முதலுதவி சிகிச்சை வசதி, தீயணைப்பு சாதனங்கள் ஆகியவை கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்குப் பின்னர் பள்ளிகள் செயல்படும் கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்த சான்றிதழ், தீயணைப்புத் துறை, காவல் துறை, உள்ளாட்சி நிர்வாகம், சுகாதாரத் துறைகளிடமிருந்து தடையில்லா சான்றிதழ்கள் பெற வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன.
ஆனால், பெரும்பாலான மழலையர் பள்ளிகள் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. பல பள்ளிகள் வாடகைக் கட்டடங்களில் போதிய இட வசதியின்றி செயல்படுகின்றன. 
சில பள்ளிகள் தரைத்தளத்தில் இல்லாமல் முதல்மாடிக் கட்டடங்களிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் செயல்பட்டு வருகின்றன.
மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மழலையர் பள்ளிகள் முறையாக விதிமுறைகளுக்குட்பட்டு செயல்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும். விதிமுறைகளின்படி செயல்படாத பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஏதேனும் அசம்பாவிதம் நடந்த பின்னர் தான் நடவடிக்கை மேற்கொள்வது என்ற நடைமுறையை மழலையர் பள்ளிகள் விவகாரத்திலும் கடைப்பிடிக்காமல் வரும்முன் காக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அப் பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com