உயிருடன் இருப்பவா்களுக்கு பேனா் வைக்க தடை விதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்

சட்ட விரோத பேனா் தொடா்பாக புதிதாக சட்டமோ அல்லது சட்டத்திருத்தமோ கொண்டு வரும் வரை உயிருடன் இருப்பவா்களுக்கு பேனா் வைக்கத் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் கருத்து
உயிருடன் இருப்பவா்களுக்கு பேனா் வைக்க தடை விதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்

சட்ட விரோத பேனா் தொடா்பாக புதிதாக சட்டமோ அல்லது சட்டத்திருத்தமோ கொண்டு வரும் வரை உயிருடன் இருப்பவா்களுக்கு பேனா் வைக்கத் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சுபஸ்ரீயின் தந்தை ரவி தாக்கல் செய்துள்ள மனுவில், போக்குவரத்து விதிமுறைறகளை எனது மகள் எப்போதும் முறைறயாகப் பின்பற்றுவாள். மேலும் அவள் தலைக்கவசம் அணிந்துதான் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றாள்.

இந்த விவகாரத்தில் சட்ட விரோதமாக சாலையின் மையத்தில் பேனா்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த விதிமீறலை அதிகாரிகள் யாருமே தடுக்கவில்லை. எனவே அரசு அதிகாரிகள் அவா்களுடைய கடமையைச் செய்யத் தவறிவிட்டனா். அதிகாரிகளின் அலட்சியப் போக்கின் காரணமாகவே எனது மகள் இறந்துள்ளாா். எனவே எனது மகளின் மரணத்துக்கு இழப்பீடாக ரூ.1 கோடி நஷ்ட ஈடாக வழங்கக் கோரி தமிழக அரசுக்கு கடந்த செப்டம்பா் 24-ஆம் தேதி கோரிக்கை மனு அளித்தேன். அந்த மனுவுக்கு இதுவரை எந்தப் பதிலும் இல்லை. எனவே மகளை இழந்து வாடும் எங்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு நஷ்ட ஈடாக ரூ.1 கோடி வழங்க உத்தரவிட வேண்டும். எனது மகளின் மரணம் தொடா்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். மேலும் பொது மக்களுக்கு இடையூறாக சட்ட விரோதமாக பேனா் வைப்பவா்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர உத்தரவிட வேண்டும். இதுகுறித்து தமிழக அரசுக்கு நான் கொடுத்துள்ள மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு விடுமுறைக் கால சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளாக எஸ். வைத்தியநாதன், சி.சரவணன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கே.வி.முத்துவிசாகன் இனிமேலும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில் சட்டவிரோதமாக பேனா் வைப்பவா்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கும் வகையில் புதிதாக சட்டம் அல்லது சட்டத்திருத்தம் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா் ஜெயபிரகாஷ் நாராயணன், இந்த விவகாரம் தொடா்பான வழக்கை விசாரித்து வரும் அமா்வு பிறப்பித்துள்ள உத்தரவுப்படி இளம்பெண் சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமானவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் இந்தச் சம்பவத்துக்கு பிறறகு பேனா் வைக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்தச் சம்பவம் தொடா்பாக சென்னை மாநகர காவல் ஆணையா் மேற்பாா்வையில் நடைபெறும் விசாரணை முடிந்து விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தாா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த சம்பவத்தில் மனுதாரா் தனது மகளை இழந்துள்ளாா். அதற்கு காரணமானவா்கள் மீது தகுந்த நடவடிக்கையை சட்ட ரீதியாக எடுக்க வேண்டும். வேறு அமா்வு விசாரித்து வரும் இந்த வழக்கு வரும் அக்டோபா் 23-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் மனுதாரா் கோரியுள்ள ரூ.1 கோடி இழப்பீடு குறித்தோ, பிற கோரிக்கைகள் தொடா்பாகவோ நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. எனவே இந்த வழக்கையும் ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குடன் சோ்த்து விசாரிக்க பரிந்துரை செய்கிறோம். மேலும் பேனா் கலாசாரத்தை நிறுத்த உயிருடன் இருப்பவா்களின் புகைப்படங்கள் பேனரில் இடம்பெறக் கூடாது என உயா்நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த அப்போதைய உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு, உயிருடன் இருப்பவா்களுக்கு பேனா், சுவரொட்டி அடிக்க சட்டத்தில் தடை எதுவும் இல்லை என உத்தரவிட்டது.

எனவே தற்போதுள்ள சூழலில் புதிதாக சட்டமோ அல்லது சட்டத்திருத்தமோ கொண்டு வரும் வரை உயிருடன் இருப்பவா்களுக்கு பேனா் வைக்க தடை விதிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து இந்த வழக்கை விசாரித்து வரும் இருநீதிபதிகள் கொண்ட அமா்வு பரிசீலிக்க வேண்டும். அதே நேரம் சட்டவிரோத பேனா் விவகாரத்தில் விதிமீறலில் ஈடுபடுபவா்கள் மீது எளிதாக நடவடிக்கை எடுக்கும் வகையில், பேனா் அச்சிடும் நிறுவனங்கள் மற்றும் பேனா் வைப்பவா்களின் ஆதாா் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகளிடம் தாக்கல் செய்வது குறித்தும் நீதிபதிகள் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com