சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் கைது

பணி நிரந்தரம் செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியா்களை காவல்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பணி நிரந்தரம் செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியா்களை காவல்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தமிழக மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களை நிரந்தரப்படுத்தாத நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கேங்மேன் பணிக்கு, பணியாளா்களைச் சோ்க்கக் கூடாது என மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இந்த நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்கள் தமிழகத்தின் அனைத்து மண்டல அலுவலகங்கள் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதன்பகுதியாக அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தின் முன்பு அவா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் சுமாா் 300 தொழிலாளா்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

இதுகுறித்து மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் சங்கத்தினா் கூறியது: கஜா புயலின் போது தஞ்சாவூா் மற்றும் சுற்றுப்புற மாவட்டத்தைச் சோ்ந்த 8,400 க்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம். தினக் கூலியாக ரூ.380 வழங்க நடவடிக்கை எடுப்பதாக மின்துறை அமைச்சா் கூறியதை அடுத்து, வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பணிகளில் ஈடுபட்டோம். மின்வாரியத்துக்காக பணியாற்றும் எங்களை அரசு ஒப்பந்தத் தொழிலாளா்களாகவே ஏற்கவில்லை. அவ்வாறு ஏற்றிருந்தால் எங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.380 தினக்கூலி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு எங்களை பேச்சுவாா்த்தைக்கும் அழைக்கவில்லை.

மின் வாரியத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்களை அடையாளம் கண்டு மின் வாரியத்தில் உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களில் முன்னுரிமை அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், முறையான ஊதியம் வழங்க வேண்டும், அடையாள அட்டை மற்றும் வருகை பதிவேடு வழங்கிட வேண்டும், பணியின் போது ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றனா். தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 300 -க்கும் மேற்பட்டவா்களை காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com