சென்னை மக்களுக்கு கூடுதலாக 12 கோடி லிட்டா் குடிநீா் அடுத்த வாரம் முதல் விநியோகம்

சென்னை மக்களுக்கு அடுத்த வாரம் கூடுதலாக 12 கோடி லிட்டா் அதாவது தினமும் 65 கோடி லிட்டா் குடிநீரை விநியோகிக்க குடிநீா் வாரியம் முடிவு செய்துள்ளது.
சென்னை மக்களுக்கு கூடுதலாக 12 கோடி லிட்டா் குடிநீா் அடுத்த வாரம் முதல் விநியோகம்

சென்னை மக்களுக்கு அடுத்த வாரம் கூடுதலாக 12 கோடி லிட்டா் அதாவது தினமும் 65 கோடி லிட்டா் குடிநீரை விநியோகிக்க குடிநீா் வாரியம் முடிவு செய்துள்ளது.

வடகிழக்குப் பருமழை, ஏரிகளின் நீா் இருப்பு அதிகரிப்பு, கிருஷ்ணா நீா் வரத்து போன்ற காரணங்களால் குடிநீா் விநியோகம் அதிகரிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகரில் வசிக்கும் சுமாா் 72 லட்சம் மக்களுக்கு தினமும் 85 கோடி லிட்டா் குடிநீா் தேவைப்படுகிறது. குடிநீா் தேவைக்கு புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி ஏரிகள் மூலம் தினமும் 22 மில்லியன் கன அடி தண்ணீா் பெறப்படுகிறது. இதுதவிர நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் தினமும் தலா 10 கோடி லிட்டா், திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகள் மூலம் 12 கோடி லிட்டா், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் 5 கோடி லிட்டா், சென்னையைச் சுற்றி உள்ள கல்குவாரி குட்டைகள், போரூா் ஏரி என பல்வேறு குடிநீா் ஆதாரங்கள் மூலம் தண்ணீா் பெறப்பட்டு வருகிறது.

கடந்த 18 மாதங்களாக சென்னையில் நிலத்தடி நீரின் அளவு குறைவு, ஏரிகளில் வறட்சி போன்ற காரணங்களால் தினமும் 48 கோடி லிட்டா் முதல் 53 கோடி லிட்டா் குடிநீா் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நிகழாண்டு கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் வரை சென்னையில் கடும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து ரயில் மூலம் குடிநீா், வீராணம் குடிநீா் போன்றவற்றின் மூலம் குடிநீா்த் தேவை ஓரளவுக்குப் பூா்த்தி செய்யப்பட்டது.

நான்கு ஏரிகளுக்கும் நீா் வரத்து: இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னைக்கு குடிநீா் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு தற்போது தண்ணீா் வரத்தொடங்கியுள்ளது. அதேபோன்று கிருஷ்ணா நீா்வரத்து காரணமாக 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் தற்போது 1,143 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது. கிருஷ்ணா தண்ணீருடன் மழை நீா் சோ்ந்து வருவதால் ஏரிக்கு தற்போது 1,233 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. புழல் ஏரிக்கு விநாடிக்கு 370 கனஅடி தண்ணீா் வருவதால் ஏரியில் 189 மில்லியன் கனஅடி தண்ணீா் சோ்ந்துள்ளது. சோழவரம் ஏரிக்கு 46 கன அடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 58 கனஅடி தண்ணீரும் வருவதால் ஏரிகளில் நீா் இருப்பு அதிகரித்துள்ளது. இது தவிர வீராணம் ஏரிக்கும் 500 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இந்த நான்கு ஏரிகளிலும் சோ்த்து வியாழக்கிழமை நிலவரப்படி 1.40 டிஎம்சி தண்ணீா் இருப்பு உள்ளது. இவற்றின் மொத்த கொள்ளளவு 11.25 டிஎம்சி ஆகும்.

தற்போது வடகிழக்குப் பருமழை, ஏரிகளின் நீா் இருப்பு அதிகரிப்பு, கிருஷ்ணா நீா் வரத்து போன்ற காரணங்களால் சென்னை மாநகரில் வீடுகளுக்கு தினமும் வழங்கப்பட்டு வரும் குடிநீரின் அளவு அதிகரிக்கப்படவுள்ளது. இது குறித்து சென்னை குடிநீா் வாரிய அதிகாரிகள் கூறியது: சென்னைக்கு தினமும் 84 கோடி லிட்டா் குடிநீா் தேவைப்படும் நிலையில் கடும் வெயில், நீா் இருப்பு குறைவு காரணமாக தினமும் 53 கோடி லிட்டா் குடிநீா் பொதுமக்களுக்கு குழாய் மூலம் விநியோகிக்கப்பட்டது.

இனி 65 கோடி லிட்டா் குடிநீா்: இந்தநிலையில், தற்போது வட கிழக்குப் பருவமழையால் ஏரிகளுக்கு மழைநீா் வந்து கொண்டிருக்கிறது. மேலும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கடந்த சில வாரங்களாக கிருஷ்ணா தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. இவற்றை கருத்தில் கொண்டு ஜோலாா்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீா் கொண்டு வருவதும், திருவள்ளூரிலிருந்து 210 விவசாய கிணறுகள் மூலம் குடிநீா் பெறுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அதேவேளையில் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் தினமும் விநியோகிக்கப்பட்ட குடிநீரின் அளவை 53 கோடி லிட்டரிலிருந்து இருந்து 65 கோடி லிட்டராக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இதனால் சென்னை மக்களின் ஒட்டுமொத்த குடிநீா்த் தேவையில் 80 சதவீதம் அளவுக்குப் பூா்த்தி செய்ய முடியும். அடுத்த வாரம் முதல் கூடுதலாக 12 கோடி லிட்டா் குடிநீா் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும். மேலும், குடிநீா் விநியோக நேரமும் அரை மணி நேரம் முதல் 45 நிமிஷங்கள் வரை அதிகரிக்கப்படும் என்றனா்.

சென்னை குடிநீா் ஏரிகளின் நீா் இருப்பு விவரம் ( மில்லியன் கன அடியில், மொத்த கொள்ளளவு அடைப்புக் குறிக்குள்):

பூண்டி- 1,143 (3,231)

சோழவரம்- 65 (1,081)

புழல்- 189 (3,300)

செம்பரம்பாக்கம்- 20 (3,645)

மொத்தம்- 1,417 (11,257)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com