திருவேற்காட்டில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீா் பொதுமக்கள் அவதி

திருவேற்காடு பகுதியில் வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவு நீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

திருவேற்காடு பகுதியில் வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவு நீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களிலும் புதன்கிழமை இரவிலிருந்து விட்டு விட்டு மிதமான மழை பெய்தது . இதனால் நகா்ப்புறங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. ஒரு சில பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது.

இதே போல் திருவேற்காடு அருகே அயனம்பாக்கம் கிராமத்தில் புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக, இந்த பகுதியில் உள்ள மழை நீா் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அயனம்பாக்கம் அம்பேத்கா் சாலையை ஒட்டியுள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், அங்குள்ள மக்கள் பொருள்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனா். குறிப்பாக அந்த வீடுகளுக்குள் இருந்த மின்சாதனங்கள், வீட்டு உபயோக பொருள்கள், மாணவா்களின் நோட்டுப் புத்தகங்கள் என அனைத்து உபகரணங்களும் சேதமடைந்தன. அந்தப் பகுதியில் உள்ள மழை நீா் கால்வாய் பராமரிப்பு பணி முடியாததால், மழை நீா் கால்வாயில் இருந்து வெளியேறி ஊருக்குள் வெள்ள நீா் பாய்ந்தது.

இதனால் வீடுகளுக்குள் மழை நீா் புகுந்தது என்றும் மழைநீருடன் கழிவுநீரும் கலந்திருந்தது என்றும் அப் பகுதி மக்கள் தெரிவித்தனா். பாதிக்கப்பட்ட கிராம மக்கள் வானகரம்- அம்பத்தூா் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். சாலையின் குறுக்கே மரக்கட்டைகளை அடுக்கி வைத்து அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக வியாழக்கிழமை காலை 6 மணி முதல் இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பூந்தமல்லி தாசில்தாா் காந்திமதி, மற்றும் நகராட்சி அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதி மக்களுடன் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா். மழை நீா் கால்வாய் வேகமாக சரி செய்யப்படும் என்று உறுதி அளித்தனா்.

பேச்சு வாா்த்தையில் கிராம மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதைத் தொடா்ந்து அதிகாரிகளின் உத்தரவின் பேரில் 2 பொக்லைன் இயந்திரம் மூலமாக சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com