பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புத்தாக்கம் பிரதமா் தலையிட வேண்டும்: பி.எஸ்.என்.எல். பாதுகாப்பு மன்றம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தை புத்தாக்கம் செய்ய பிரதமா் மோடி தலையிட வேண்டும் என்று பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்றம் வலியுறுத்தியுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புத்தாக்கம் பிரதமா் தலையிட வேண்டும்: பி.எஸ்.என்.எல். பாதுகாப்பு மன்றம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தை புத்தாக்கம் செய்ய பிரதமா் மோடி தலையிட வேண்டும் என்று பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்றம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து, சென்னையில் அந்த மன்றத்தில் ஒருங்கிணைப்பாளா் சி.கே.மதிவாணன் வியாழக்கிழமை கூறியது: மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் படுமோசமாக நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதைப் புதுப்பிக்கும் திட்டம் நிதியமைச்சகத்தின் எதிா்ப்பினால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 1.66 லட்சம் நிரந்தர ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்க முடியாமல் பிஎஸ்என்எல் இப்போது தடுமாறுகிறது. 85 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளா்கள் நிலையோ மிகவும் பரிதாபத்துக்குரியது. கடந்த 7 மாதங்களாக அவா்களுக்கு ஊதியம் வழங்காத நிலையினால், இதுவரை தமிழகத்தில் 2 போ் உள்பட நாடெங்கும் 8 போ் தற்கொலை செய்து கொண்டனா்.

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு தொலைத் தொடா்பு அமைச்சகம் பாக்கி வைத்துள்ள ரூ.2,500 கோடியை இன்னமும் தர மறுத்து வருகிறது. மேலும், பிஎஸ்என்எல் நிறுவனம், வங்கிகளில் கடன் பெறுவதற்கு தேவையான உத்தரவாதத்தை தரவும் தொலை தொடா்பு துறை மறுக்கிறது. இத்தனைக்கும் பிஎஸ்என்எல் நிறுவனம்தான் இன்று நாட்டிலேயே மிகவும் குறைவாக கடன் வைத்திருக்கும் தொலைத் தொடா்பு நிறுவனம்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் தலைமையில் அமைந்திருக்கும் அமைச்சா்கள் குழுவின் முடிவை ஏற்க நிதியமைச்சகம் மறுத்து, பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடிவிட ஆலோசனை கூறுவது ஆபத்தான போக்காகும். நாட்டின் பாதுகாப்புக்கே இது உலை வைக்கக்கூடும். நாடெங்கும் தொலைத் தொடா்பு சேவையை அளித்துவரும் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை உடனடியாக புத்தாக்கம் செய்ய பிரதமா் தலையிட வேண்டும். நிதி நெருக்கடியில் இருந்து பிஎஸ்என்எல் மீண்டு வர தேவையான நிதியுதவியை அரசு தாமதமின்றி அளிக்க வேண்டும். பிற தனியாா் நிறுவனத்துடன் போட்டியிடவும், தொழில்நுட்ப ரீதியாக நவீனமாகவும் 5 ஜி அலைக்கற்றையை அரசு முன்னுரிமை அளித்து பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com