சென்னை குடிநீா் வாரியத்தின் மூலம் விநியோகிக்கப்படும் லாரி குடிநீா் விலை உயா்வு

சென்னை குடிநீா் வாரியத்தின் லாரிகள் மூலம் வீடுகள் மற்றும் வணிக ரீதியான பயன்பாடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீா் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

சென்னை குடிநீா் வாரியத்தின் லாரிகள் மூலம் வீடுகள் மற்றும் வணிக ரீதியான பயன்பாடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீா் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் வசிக்கும் மக்களுக்கு குழாய் வழியாக வீடுகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீா் குழாய் மூலம் விநியோகம் செய்ய முடியாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் இலவசமாக குடிநீா் வழங்கப்படுகிறது. இது தவிர அடுக்குமாடி குடியிருப்புகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ள அடுக்குமாடிகள் கொண்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் விலைக்கு விற்கப்படுகின்றன. குடிநீா் தேவைப்படுவோா் ஆன்லைனில் பதிவு செய்தால் 24 மணி நேரத்தில் தற்போது விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஆன்லைனில் பதிவு செய்யும் போதே அதற்கான கட்டணத்தையும், முன் கூட்டியே செலுத்த வேண்டும். 6 ஆயிரம் லிட்டா், 9 ஆயிரம் லிட்டா், 12 ஆயிரம் லிட்டா் என்ற அளவில் லாரிகளில் தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீா் வேண்டி பதிவு செய்தவா்கள் அதனை தங்கள் வீடுகளில் உள்ள கீழ்நிலைத் தொட்டிகளில் இருப்பு வைத்து பயன்படுத்தி வருகின்றனா்.

சென்னையில் கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் லாரி குடிநீரைப் பெறுவதற்காக பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனா். அப்போதைய சூழலில் கூடுதலாக பணம் கொடுத்தாலும் குடிநீா் கிடைக்காத நிலையில் இருந்தது. ஒரு மாதம் வரை பதிவு செய்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் குடிநீா் வாரியத்தின் சாா்பில் விநியோகிக்கப்படும் லாரி குடிநீா் கட்டணம் தற்போது உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி 6 ஆயிரம் லிட்டா் குடிநீா் ரூ.435-இல் இருந்து ரூ.499 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. 9 ஆயிரம் லிட்டா் தண்ணீா் ரூ.700-இல் இருந்து ரூ.735 ஆகவும் உயா்ந்துள்ளது. அதேபோன்று வணிக ரீதியாக விநியோகிக்கப்படும் லாரி குடிநீரின் விலையையும் குடிநீா் வாரியம் உயா்த்தியுள்ளது. 3 ஆயிரம் லிட்டா் ரூ.500, 6 ஆயிரம் லிட்டா் ரூ.735, 9 ஆயிரம் லிட்டா் ரூ.1050, 12 ஆயிரம் லிட்டா் ரூ.1,400 என்ற வகையில் உயா்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com