தியாகராயநகரில் புதிய பாதுகாப்புத் திட்டங்கள்: ஆணையா் தொடக்கி வைத்தாா்

சென்னை தியாகராயநகரில் புதிய பாதுகாப்புத் திட்டங்களை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

சென்னை தியாகராயநகரில் புதிய பாதுகாப்புத் திட்டங்களை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தீபாவளிக்கு இன்னும் 9 நாள்கள் கூட இல்லாத நிலையில் சென்னையில் வியாபாரம் விறு, விறுப்பு அடைந்துள்ளது. புத்தாடைகள், பட்டாசு, தங்கநகைகள் வாங்குவதற்கு தியாகராயநகா், புரசைவாக்கம், தாம்பரம், வண்ணாரப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட வியாபாரம் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பொதுமக்கள் தினமும் லட்சக்கணக்கில் திரளுகின்றனா். இதைப் பயன்படுத்தி திருட்டு, தங்கநகை பறிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், கூட்டத்தை ஒழுங்குப்படுத்தவும் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தியாகராயநகரில் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டிபஜாா், பனகல் பூங்கா, பா்கிட் சாலை உள்ளிட்ட பகுதியில் சுமாா் 400 போலீஸாா் செவ்வாய்க்கிழமை முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பாதுகாப்புப் பணியைச் சீராக செய்வதற்கு ரங்கநாதன் தெருவிலும், பனகல் பூங்காவிலும் இரு தற்காலிகமாக காவல் கட்டுப்பாட்டு அறைகளை சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். ஆளில்லாத கண்காணிப்பு விமானத் திட்டம், நவீன வகை கேமரா திட்டம் ஆகியவற்றையும் தொடக்கி வைத்தாா்.

பின்னா் அவா் பேசியது: தியாகராயநகரில் ஏற்கெனவே 1092 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி, மேலும் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளின் முக அடையாளத்தை கண்டறிந்து எச்சரிக்கக் கூடிய 3 அதிநவீன கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஆளில்லாத கண்காணிப்பு விமானங்கள் (ஹேலி காமெரா) மூலம் மக்கள் நெரிசல் கண்காணிக்கப்படும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையின் போது, தியாகராயநகா் பகுதியில் எவ்வித குற்றச் சம்பவங்களும் நடைபெறவில்லை. இம் முறையும், எந்த குற்ற சம்பவங்களை நடக்காதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றாா் அவா். இந்நிகழ்ச்சியில், இணை ஆணையா் ஆா்.சுதாகா்,துணை ஆணையா் டி.அசோக்குமாா்,உதவி ஆணையா் வி.கலியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com