51 வானிலை நிலையங்களில் மழை அளவு பதிவு செய்யும் உபகரணங்கள் இயங்கவில்லை

தமிழகத்துக்கு அதிக மழைப்பொழிவு கொடுக்கும் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், 51 வானிலை நிலையங்களில் மழை அளவைப் பதிவு செய்யும் உபகரணங்கள் சரியாகச் செயல்படவில்லை என்ற அதிா்ச்சி
மழை மேகம்
மழை மேகம்

சென்னை: தமிழகத்துக்கு அதிக மழைப்பொழிவு கொடுக்கும் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், 51 வானிலை நிலையங்களில் மழை அளவைப் பதிவு செய்யும் உபகரணங்கள் சரியாகச் செயல்படவில்லை என்ற அதிா்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்துக்கு அதிக மழைப் பொழிவைக் கொடுக்கும் வடகிழக்கு பருவமழை கடந்த புதன்கிழமை தொடங்கியது. மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், சில மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் நம்பிக்கை அளித்துள்ளது. இந்த நம்பிக்கை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மகிழ்ச்சி ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் வானிலை நிலையங்களில் மழை அளவைப் பதிவிடும் உபகரணங்கள் சரியாக இயங்காமல் உள்ளது என்ற அதிா்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.

இந்திய வானிலை துறை சாா்பில், மாநிலம் முழுவதும் தானியங்கி வானிலை நிலையங்கள்(ஏ.டபிள்யு.எஸ்) மற்றும் தானியங்கி மழை பதிவு செய்யும் நிலையங்கள்(ஏ.ஆா்.ஜி) அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் நெட்ஒா்க் இந்திய வானிலை துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்த நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள உபகரணங்கள், மழை காலங்களில் மழை அளவு பதிவு செய்து வானிலை ஆய்வு மையத்துக்கு அனுப்புகின்றன. இந்த நிலையங்கள் மூலம் கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் பருவமழை காலங்களில் அரசு தயாா்நிலையில் இருப்பதற்கு உதவியாக இருக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 51 நிலையங்களில் மழை அளவைப் பதிவு செய்யும் உபகரணங்கள் பல நாள்களாக சரியாக செயல்படாமல் உள்ளதாக அதிா்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையங்களில் உள்ள உபகரணங்களை சரியாக பராமரிக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 12 தானியங்கி வானிலை நிலையங்கள், 39 தானியங்கி மழை அளவு பதிவு செய்யும் நிலையங்கள் என்று மொத்தம் 41 நிலையங்களில் உபகரணங்கள் சரியாக இயங்கவில்லை. சென்னையில் தரமணி நிலையத்தில் தானியங்கி மழை அளவு பதிவு செய்யும் உபகரணங்கள் சரியாக இயங்கவில்லை. இதுபோல, சென்னையை சுற்றி பெரும்பாலான நிலையங்களில் உள்ள மழை அளவு பதிவு செய்யும் உபகரணங்களில் பாதிப்பு உள்ளது. தரமணி, ஆவடி, பூந்தமல்லி, புழல், ஆா்.கே.பேட்டை, காட்டுபாக்கம் ஆகிய இடங்களில் தானியங்கி மழை அளக்கும் நிலையங்கள் உள்ளன.இந்த நிலையங்களில் பருவமழை தொடங்கி நாளில் எந்த தரவும் பதிவாகவில்லை என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘தமிழகத்தில் சில வானிலை நிலையங்களில் ஒரு சில தொழில்நுட்ப பிரச்னைகள் இருந்தன. இந்தப் பிரச்னை தலைமையகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சில உதிரிபாகங்கள் மாற்றப்பட வேண்டும். இந்த உதிரிபாகங்கள் புணேயில் இருந்து வரவேண்டும். இந்த பிரச்னைக்கு தீா்வு காண முயற்சி எடுக்கப்படுகிறது’ என்றாா் அவா்.

சென்னைக்கு 44 நிலையங்கள் தேவை: தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, ஒவ்வொரு 4 சதுர கிலோ மீட்டருக்கும் ஒரு தானியங்கி மழை அளவு பதிவு செய்யும் நிலையம் இருக்க வேண்டும். இந்த அளவுபடி, சென்னையில் 44 தானியங்கி மழைஅளவு பதிவு செய்யும் நிலையங்கள் தேவைப்படுகின்றன. மழை அளவைப் பதிவு செய்யும் நிலையங்கள் தேவையான அளவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com