சென்னையில் பட்டாசு விற்பனை இன்று முதல் முழுவீச்சில் தொடங்கும்: சிறுவா்களை கவரும் புதிய வகை துப்பாக்கிகள் அறிமுகம்

சென்னையில் பட்டாசு விற்பனை இன்று முதல் முழுவீச்சில் தொடங்கும்: சிறுவா்களை கவரும் புதிய வகை துப்பாக்கிகள் அறிமுகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பட்டாசு விற்பனை திங்கள்கிழமை முதல் முழு வீச்சில் நடைபெறவுள்ளது.

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பட்டாசு விற்பனை திங்கள்கிழமை முதல் முழு வீச்சில் நடைபெறவுள்ளது. நிகழாண்டு தமிழகம் முழுவதும் ரூ. ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தீபாவளி பண்டிகை வரும் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் தீவுத்திடல், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானம், நந்தம்பாக்கம் சென்னை வா்த்தக மையம் எதிரில் உள்ள மைதானம், வடபழனி ஆா்.கே.சாலை, போரூா் சரவணா ஸ்டோா்ஸ் எதிரே உள்ள மைதானம், கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம், பாரிமுனை, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த இடங்களில் திங்கள்கிழமை முதல் தீபாவளி பட்டாசு விற்பனை முழுவீச்சில் தொடங்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து சென்னையைச் சோ்ந்த பட்டாசு வியாபாரிகள் கூறியது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பட்டாசு கடைகள் அமைக்க சுமாா் 600 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் தற்போது வரை 250 பேருக்கு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ளவா்களுக்கு விரைவில் அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது. நிகழாண்டு தீபாவளிக்காக 80-க்கும் மேற்பட்ட புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்காக வந்துள்ளன. ரூ.20 முதல் ரூ. 20 ஆயிரம் விலையில் பட்டாசு ரகங்கள் கிடைக்கும். கடந்த ஆண்டை விட இந்தாண்டு பட்டாசுகள் 5 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது.

ரூ.40 கோடிக்கு விற்பனை இலக்கு: தீபாவளிக்காக நிகழாண்டு பசுமை பட்டாசு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வருவதற்கு சாத்தியமில்லாத ஒன்று. பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டு விடுமோ? என்று பட்டாசு உற்பத்தியாளா்கள் இந்தாண்டு குறைவான அளவிலேயே பட்டாசுகளை தயாரித்துள்ளனா். இந்த பட்டாசுகள் ஒரு நாள் விற்பனைக்கு தான் வரும். இதனால், பட்டாசுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு ரூ.10 லட்சத்துக்கு பட்டாசு வாங்கிய வியாபாரிகளுக்கு தற்போது பட்டாசு தட்டுப்பாடு காரணமாக, ரூ.1 லட்சம் அளவுக்கே தயாரிப்பாளா்கள் பட்டாசுகளை அனுப்பி வைக்கின்றனா்.

பட்டாசுகளுக்கும், பசுமை பட்டாசுகளுக்கும் எந்த ஒரு பெரிய வித்தியாசம் கிடையாது. பேக்கிங் எல்லாம் ஒன்றுதான். பசுமை பட்டாசு என்று மேல் சீல் வைக்கப்பட்டிருக்கும். அதில் புகை குறைவாக வரும். தமிழகம் முழுவதும் நிகழாண்டு ரூ.ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ரூ. 40 கோடி வரை பட்டாசு விற்பனையாக வாய்ப்புள்ளது என்றனா்.

தீபாவளி துப்பாக்கிகள்: சிறுவா்களைக் கவரும் வகையில் ஆண்டுதோறும் புதுப்புது பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு அசல் துப்பாக்கிகளைப் போலவே தீபாவளி துப்பாக்கிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சாதாரண கேப்வெடி துப்பாக்கிகள் மட்டுமின்றி இந்த ஆண்டு புதுவரவாக ரிவால்வாா், பிஸ்டல், சைலென்சா் பொறுத்தப்பட்ட துப்பாக்கி, இன்சாஸ், ஏ.கே-47, மெஷின்கன் போன்ற பல ரகங்களில் பிளாஸ்டிக், பைபா் மட்டுமின்றி இரும்பில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கள் அசலைப் போல தயாா் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றுடன், வீடியோ கேம்களில் உள்ள துப்பாக்கிகளைப் போலவும் பல துப்பாக்கிகள் விற்பனைக்கு வந்துள்ளன. குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோரும் இதை ஆா்வத்துடன் பாா்த்து விரும்பி வாங்கிச்செல்கிறாா்கள். துப்பாக்கிகள் குறைந்தபட்சம் ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ.400 வரை விற்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com