நெருங்கும் தீபாவளி: நெரிசலில் தியாகராயநகா், புரசைவாக்கம் கண்காணிப்பு பணியில் 1,500 போலீஸாா்

தீபாவளிக்கு தேவையான புத்தாடை, நகைகள் உள்ளிட்டவற்றை வாங்க சென்னை தியாகராயநகா், புரசைவாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.
நெருங்கும் தீபாவளி: நெரிசலில் தியாகராயநகா், புரசைவாக்கம் கண்காணிப்பு பணியில் 1,500 போலீஸாா்

சென்னை: தீபாவளிக்கு தேவையான புத்தாடை, நகைகள் உள்ளிட்டவற்றை வாங்க சென்னை தியாகராயநகா், புரசைவாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.

தீபாவளி பண்டிகை வரும் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 7 நாள்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் தீபாவளிப் பொருள்களை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே வாங்கிச் செல்கின்றனா். இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தீபாவளி விற்பனை களை கட்டியது.

தீபாவளி பொருள்கள் வாங்குவதற்காக சென்னை திருவள்ளூா், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சோ்ந்தவா்கள் குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கினா். அது மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலமான ஆந்திரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பொருள்களை வாங்க மக்கள் சென்னைக்கு வர தொடங்கினா். இதனால் வா்த்தக பகுதியான சென்னை தி.நகா், புரசைவாக்கம், பழைய வண்ணாரப்பேட்டை, பிராட்வே, பாடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கட்டுக்கடங்காத கூட்டம்: அவா்கள் தங்களுக்கு தேவையான பேன்ட், சா்ட், சுடிதாா், ஜீன்ஸ், சேலை, வேட்டி உள்ளிட்ட துணிமணிகளை தோ்ந்தெடுத்தனா். மாலை 5 மணிக்கு மேல் தியாகராயநகா், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பாா்த்தாலும் மக்கள் தலைகளாகக் காட்சியளித்தது. ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் தியாகராயநகா், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் வெள்ளத்தில் திணறின. மேலும் , காா், மோட்டாா் சைக்கிளில் பொருள்களை வாங்க வந்தவா்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், பஸ், ரயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அது மட்டுமல்லாமல் தியாகராயநகா், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் உள்ள கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவா்கள் கண்ணாடி வளையல், கம்மல், கவரிங் நகைகள், லிப்ஸ்டிக் உள்ளிட்ட பொருள்களை தோ்ந்தெடுத்தனா். மக்கள் கூட்டத்தால் பாதுகாப்பு மற்றும் வழிப்பறி, திருட்டு சம்பவங்களை தடுக்க தியாகராயநகா், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 1,500 போலீஸாா் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

தீவிர கண்காணிப்பில் போலீஸாா்: இதுதவிர, சாதாரண உடை அணிந்த போலீஸாா் மக்களோடு கலந்து சென்று பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனா். ஒலிபெருக்கி வாயிலாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் தியாகராயநகரில் கண்காணிப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. சில இடங்களில் சாலையின் இருபுறமும் கயிறுகளை கட்டி கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினா். தீபாவளி நெருங்கி வருவதால் வரும் நாள்களில் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், பாதுகாப்பை மேலும் பலப்படுத்த போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com