முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
காவல் ஆய்வாளர் மீது வழக்கு
By DIN | Published On : 24th October 2019 02:20 AM | Last Updated : 24th October 2019 02:20 AM | அ+அ அ- |

சென்னை பெரியமேட்டில் தள்ளுவண்டி கடையை தாக்கிய சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் மீது வழக்குப் பதியப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: பெரியமேடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான். இவர் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி பெரியமேடு சாமி தெருவில் தனது தள்ளுவண்டி கடையை அப்துல் ரஹ்மான் நிறுத்தி வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அப்போதைய பெரியமேடு காவல் நிலைய சட்டம் மற்றும் ஒழுங்கு ஆய்வாளர் சிவராஜன், அந்த தள்ளுவண்டி கடையை தாக்கி உடைத்ததாகக் கூறப்படுகிறது. இச் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது.
மேலும் கண்காணிப்பு கேமராவில் இருந்த அந்த காட்சியை சிலர் சமூக ஊடகங்களில் பரப்பினர். மேலும் இது தொடர்பாக காவல் ஆய்வாளர் சிவராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆனால் காவல்துறை சார்பில் சிவராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தள்ளுவண்டியை தாக்கி உடைத்த ஆய்வாளர் சிவராஜன் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சிவராஜன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க பெரியமேடு போலீஸாருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து போலீஸார், சிவராஜன் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.