முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
டெங்கு: உரிய சிகிச்சை அளிக்கத் தவறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எச்சரிக்கை
By DIN | Published On : 24th October 2019 02:24 AM | Last Updated : 24th October 2019 02:24 AM | அ+அ அ- |

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தாய் திட்டத்தின்கீழ் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு.
டெங்கு காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்கத் தவறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தீக்காய சிகிச்சைப் பிரிவுக்கான அதிநவீன வசதிகள் (லேமினார் ஃப்ளோ) மற்றும் தாய் திட்ட அவசர கால சிகிச்சை பிரிவுகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சுகாதாரத் துறை அமைச்சர் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
லேமினார் ஃப்ளோ கட்டமைப்பைப் பொருத்தவரை அறுவை சிகிச்சைக் கூடங்கள், குறிப்பிட்ட சில தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ஆகியவற்றில் மட்டுமே அந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கும். காற்றில் பரவும் தொற்றுகளை முழுமையாக வடிகட்டுவதற்கும், கிருமிகள் நிறைந்த சூழலைக் கூட சுகாதாரமாக மாற்றுவதற்கும் அவை பயன்படுத்தப்படுகின்றன.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் செயல்படும் இருவேறு தீக்காய சிகிச்சைப் பிரிவுகளிலும் ரூ.2.30 கோடி செலவில் லேமினார் ஃப்ளோ கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இந்த வசதி இல்லை எனத் தெரிகிறது.
முன்னதாக, அந்த வசதிகளை தொடக்கி வைத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:
தீக்காயமடைந்தவர்களுக்கு எளிதில் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மருத்துவமனையில் சக நோயாளிகளுடன் சிகிச்சை பெறும்போது அத்தகைய பாதிப்புகள் ஏற்படக்கூடும். அதைக் கருத்தில் கொண்டே இந்த அதி நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் சம்பந்தப்பட்ட சிகிச்சைப் பிரிவில் காற்றில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் பரவுவதை 100 சதவீதம் கட்டுப்படுத்தி உயிரிழப்பைத் தடுக்க முடியும்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் தீக்காய சிகிச்சைகள் அளிக்க கூடுதலாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தீபாவளியையொட்டி மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவர்கள், செவிலியர்கள் அதிக அளவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதுடன், கூடுதலாக படுக்கை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பருவ காலங்களில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகளுக்கு மக்கள் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம். டெங்கு காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்கத் தவறினாலோ அல்லது தவறான சிகிச்சைகளுக்குப் பரிந்துரைத்தாலோ, சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
இந்நிகழ்வில் முன்னாள் எம்.பி. விஜயகுமார், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் வசந்தாமணி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.