முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
தீபாவளி: 310 சிறப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயங்கும்
By DIN | Published On : 24th October 2019 02:21 AM | Last Updated : 24th October 2019 02:21 AM | அ+அ அ- |

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 310 சிறப்பு மாநகரப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என போக்குவரத்துக்கழகம்அறித்துள்ளது.
இதுகுறித்து, மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கோ.கணேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தீபாவளித் திருநாளை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையிலும், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த இடங்களை நகரின் பல பகுதிகளிலிருந்து இணைக்கும் வகையில், சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன.
எனினும் எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியூர் பயணிகள் ஐந்து பேருந்து நிலையங்களுக்கு எளிதாகச் செல்ல ஏதுவாக, மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 310 சிறப்பு இணைப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, மாதவரம் பேருந்து நிலையம் வழியாக 36, தாம்பரம் பேருந்து நிலையம் வழியாக 106, பூந்தமல்லி பேருந்து நிலையம் வழியாக 72, கே.கே.நகர் பேருந்து நிலையம் வழியாக 23, கோயம்பேடு பேருந்து நிலையம் வழியாக 73 என 310 சிறப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.