தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வு: கண்காணிக்க 111 சிறப்புக் குழுக்கள்

தனியார் பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 111 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தனியார் பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 111 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால், பெரும்பாலானோர் ஊருக்குச் செல்லத் தயாராகி உள்ளனர். 
இதற்காக போக்குவரத்துத் துறை சார்பாக 3 நாள்களுக்கு  19,000 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னையில் இருந்து மட்டும் 10,940 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலைக்  கட்டுப்படுத்தும் வகையில் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 5 இடங்களில் சிறப்புப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து ஏராளமானோர் முன்பதிவு செய்தும், நேரடியாகவும் பயணம் செய்ய உள்ளனர். மேலும், பலர் தனியார் பேருந்துகளில் பயணத்துக்காக பதிவு செய்துள்ளனர். 
பண்டிகை கால நெரிசலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் பொதுவாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டணமாக ரூ.600 முதல் ரூ.1,500 வரையும், சென்னையிலிருந்து கோவைக்கு இயக்கப்படும் பேருந்துகளில் ரூ.700 முதல் அதிகபட்சம் ரூ.1,700 வரையும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 
கடந்த ஆயுத பூஜையின்போது கட்டணம் பல மடங்கு உயர்ந்தது. தற்போது தீபாவளிக்கு இன்னும் 3 நாள்களே இருப்பதால், சென்னையிலிருந்து மதுரைக்கு தற்போது ரூ.1,700 முதல் அதிகபட்சம் ரூ.2,500 வரையிலும், சென்னையிலிருந்து கோவைக்கு ரூ.1,700 முதல் ரூ.2,000 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல், ஒவ்வொரு முக்கிய ஊர்களுக்கும் கட்டணம் அதிகமாகவுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
111 சிறப்புக் குழுக்கள் அமைப்பு: இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளைக்  கண்காணிக்க போக்குவரத்துத் துறை சார்பில் தமிழகம் முழுவதும் 111 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 
 இதுகுறித்து போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் கூறியது: 
கடந்த ஆண்டு பண்டிகையின் போது சுமார் 2 லட்சம் தனியார் பேருந்துகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 35,085 பேருந்துகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 
முன்னதாக ஆயுதபூஜை தொடர் விடுமுறையின்போது நடத்தப்பட்ட சோதனையில் விதியை மீறி இயக்கியதற்காக ரூ.39.62 லட்சம் உடனடி அபராதமாக தனியார் பேருந்து உரிமையாளர்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டு உள்ளது. தற்போது தீபாவளிக்காக 111 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, சென்னையின் தெற்கு மண்டலத்தில் 12, சென்னை வடக்கு மண்டலம், கோவை, ஈரோடு, மதுரை, சேலம் ஆகிய பகுதிகளில் தலா 10, தஞ்சாவூரில் 4, திருச்சியில் 20, திருநெல்வேலியில் 16, வேலூரில்  2, விழுப்புரத்தில் 7 என மொத்தம் 111 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
இந்தக் குழுவினர் பேருந்துகளை பாதி வழியில் நிறுத்தி, திடீர் சோதனை நடத்துவர். அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், ஒரு சிலர் பழைய மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத பேருந்துகளை கொண்டுவந்து இயக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு, திடீர் சோதனையின் போது வாகனங்களின் ஆவணம் முறையாகவுள்ளதா என்பது குறித்தும் சோதனையிடப்படும். இதற்காக குறிப்பிட்ட இடங்கள் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சென்று ஆய்வு நடத்தப்படும். இந்தச் சோதனையானது வியாழக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை (அக். 29) வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தனியார் பேருந்துகள் குறித்த புகார்களுக்கு 1800 425 6151 என்ற இலவச எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com