இளநிலை யோகா படிப்பு: காலியிடங்களை நிரப்ப அக். 29-இல் சிறப்பு கலந்தாய்வு

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (அக். 29) உடனடி கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (அக். 29) உடனடி கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
இதுவரை அப்படிப்புக்காக விண்ணப்பிக்காதவர்கள்கூட அன்றைய தினம் கலந்தாய்வில் நேரடியாகக் கலந்து கொண்டு இடங்களைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் பி.என்.ஒய்.எஸ். எனப்படும் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 600-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. குறிப்பாக, அரும்பாக்கம் அறிஞர் அண்ணா இயற்கை மருத்துவத் துறை வளாகத்தில் உள்ள அரசு யோகா கல்லூரியில் 60 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 408 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 192 இடங்களும்  உள்ளன.
இந்நிலையில், அந்தப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இரண்டு கட்டங்களாக அண்மையில் நடைபெற்றன. அதில், ஏறத்தாழ அனைத்து இடங்களும் நிரம்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், கலந்தாய்வில் இடங்கள் பெற்று கல்லூரிகளில் சில மாணவர்கள் சேராததால் ஏற்பட்ட காலியிடங்களையும், புதுக்கோட்டையில் புதிதாகத் தொடங்கப்பட்ட தனியார் யோகா கல்லூரியில் உள்ள இடங்களையும் நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
அதன்படி, வரும் செவ்வாய்க்கிழமை (அக்.29) சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவ துறை வளாகத்தில் அந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களையும், கலந்தாய்வில் பங்கேற்பதற்கான நடைமுறைகளையும்  www.tnhealth.org  என்ற சுகாதாரத்துறை இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com