தீபாவளி பண்டிகை: நெரிசலைத் தவிர்க்க 21 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தீபாவளி தொடர் விடுமுறை காலத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும், பயணிகளின் வசதிக்காகவும் மாநிலம் முழுவதும் 21,586 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.


தீபாவளி தொடர் விடுமுறை காலத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும், பயணிகளின் வசதிக்காகவும் மாநிலம் முழுவதும் 21,586 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதற்கென சிறப்பு முன்பதிவு மையங்களும் புதிதாக அமைக்கப்பட்டு, அவை செயல்படத் தொடங்கியுள்ளன.
நிகழாண்டு தீபாவளிப் பண்டிகையொட்டி சொந்த ஊர்களுக்கு 8 லட்சம் பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, போக்குவரத்துத் துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக கூடுதல் எண்ணிக்கையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி,  சென்னையிலிருந்து வியாழக்கிழமை 3,267 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை 3,988 பேருந்துகளும், சனிக்கிழமை 3,735 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
அந்த மூன்று நாள்களில் மட்டும், மொத்தம் 10,940 பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.
மாநிலத்தின் பிற மாவட்டங்களைப் பொருத்தவரை, 10,646 சிறப்புப் பேருந்துகள் தீபாவளிக்காக மூன்று நாள்களும் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் கோயம்பேட்டிலிருந்து புறப்படுவது வழக்கம். தீபாவளி சிறப்புப் பேருந்துகளைப் பொருத்தவரை கூட்ட நெரிசலைத் தவிர்க்க வெவ்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து அவை இயக்கப்படவிருக்கின்றன. 
சிறப்புப் பேருந்துகள் புறப்படும் 
இடங்கள் குறித்த விவரங்கள்: 
மாதவரம் புதிய பேருந்து நிலையம் - செங்குன்றம் வழியாக ஆந்திர மார்க்கம் செல்லும் பேருந்துகள்.
கே.கே. நகர் மா.ந.போ.கழக பேருந்து நிலையம் - கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
தாம்பரம் சானடோரியம் (மெப்ஸ்) - திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.
தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் - திண்டிவனம் மார்க்கமாக செஞ்சி மற்றும்  திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்.
போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள்.
திண்டிவனம்  வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
பூந்தமல்லி பேருந்து நிலையம்  - வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு , ஓசூர், சித்தூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள்.
இவற்றை தவிர, இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூரூ) கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளன.
நெரிசலைத் தவிர்க்க: போக்குவரத்து நேரத்தைக் குறைக்கும் வகையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள், பூந்தமல்லி, நாசரத்பேட்டை, வெளிவட்டச் சாலை வழியாக வண்டலூர் சென்று பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
30 முன்பதிவு மையங்கள்: 
கணினி மூலம் உடனடி முன்பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு மையங்களும், தாம்பரம் சானடோரியத்தில் 2 மையங்களும், பூந்தமல்லி, மாதவரம் பேருந்து நிலையங்களில் தலா 1 மையமும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு காலை 7 முதல் இரவு 9 மணி வரை பொது மக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கென தனித்தனியாக சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறப்புப் பேருந்துகள் குறித்து அறிந்து கொள்வதற்கும், புகார் அளிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
ரூ.6.81 கோடி வசூல்: தீபாவளி சிறப்பு பேருந்துகளில் இதுவரை 1.39 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ரூ. 6.81 கோடி வசூலாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பேருந்துகளில் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்ய www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com உள்ளிட்ட இணையதளங்களை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com